[X] Close

மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் திமுக அங்கம் வகிக்குமா? - பதிலளிக்காத ஸ்டாலின்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 13:22 pm
  • அ+ அ-

மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 23 ஆம் தேதி பதிலளிப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை), சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதன் விவரம்:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணிகள் தான் வெற்றிபெறும் என்று வெளியாகியுள்ளன. அதுபற்றி தங்களின் கருத்து?

ஊடகங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரையில் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் ஒருவேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதுமில்லை. எங்களைப் பொறுத்தவரையில் தலைவர் கருணாநிதி மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார். இன்னும் மூன்று நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப்போகின்றது. அதைத்தான் நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம்.

மத்தியில் வரக்கூடிய ஆட்சி, எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் திமுக அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?

23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்குப் பிறகு அதற்குரிய விளக்கத்தை நான் தருகிறேன்.

சந்திரபாபு நாயுடு உங்களை தற்போது சந்தித்து பேசியுள்ளாரே?

சந்திரபாபு நாயுடு பல நேரங்களில் சந்தித்து பேசியுள்ளார். ஏற்கெனவே, சென்னை அறிவாலயத்திற்கு வந்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கின்றார். பல நேரங்களில் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்.

இன்றைக்கு மாயாவதி, சோனியா காந்தியை சந்திக்கின்றார். இந்த சந்திப்பை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

அது இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலை, தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு என்ன முடிவு எடுக்கலாம் என்ற கருத்தை பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

23 ஆம் தேதி நீங்கள் டெல்லிக்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றதா?

தேர்தலின் முடிவென்பதே 23 ஆம் தேதி மாலைக்குப் பிறகு தான் தெரியப்போகின்றது. அது தெரிந்ததற்குப் பிறகுதான் அதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்தால் அது பயனுள்ளதாக இருக்கும். அந்த அடிப்படையில் தான் காத்திருக்கின்றோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close