[X] Close

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அழிவை சந்திக்க இருக்கும் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 07:12 am
  • அ+ அ-

-க.ரமேஷ்

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம், மீன்வளம், குடிநீர் வளம் மட்டுமின்றி மாங்ரோவ் காடுகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

காவிரி படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தமாக 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல் மண்டலமான விழுப்புரம், புதுச்சேரியை சுற்றி 116 கிணறுகளும், கடலூரில் இருந்து நாகப்பட்டினம் வரை உள்ள 2-வது மண்டலத்தில் 158 கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த கிணறுகள் பூமிக்கு கீழே 4,500 மீ. ஆழம் வரைதோண்டப்படும் என கூறப்படுகிறது. இவை, காவிரி படுகையில் கடற்பகுதியில் அமைக்கப்பட உள்ளன.

இப்படி கடற்பகுதியில் கிணறுகள் அமைக்கப்படுவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் மாங்ரோவ் காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாங்குரோவ் காடுகள் கடல் நீரில் வளர்வது இல்லை. கடல் நீரைஉறிஞ்சி, அதில் உள்ள உப்பை பிரித்து, நல்ல நீரில்தான் வளர்கின்றன. மரங்களின் விழுதுகள், ஆலம்விழுதுபோல படர்ந்து விடும். பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காடு இந்தியாவில் இரண்டாவது பெரிய சதுப்பு நில தாவரங்களைக் கொண்ட காடு ஆகும்.

நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்துக்கு நீர் நிறைந்தும் இருக்கும். இப்பகுதி சதுப்பு நிலம் ஆகும். பிச்சாவரம் சதுப்பு நிலப் பகுதியில் நீரோட்டம் கொண்ட மரங்களின் வேர்ப் பகுதியில்தான் எண்ணற்ற மீன் இனங்களும் ஆமைகளும் நண்டு இனங்களும் பாதுகாப்பாக வசிக்கின்றன. இதன் வேர் பகுதி சிக்கல் மிகுந்ததாய் இருப்பதால், மற்ற உயிரிடம் இருந்துமீன் இனம் தம்மை பாதுகாத்துக் கொள்கிறது.

இப்படி நீர்வாழ் உயிர்களின் பெருக்கத்துக்கு துணையாய் இருக்கும் இந்த காட்டின் மேற்பகுதியில் கோணமூக்கு உள்ளான், ஊசிவால்வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, சோழகுருவி, பவளகொத்தி என பல்வேறு பறவை இனங்களும் தங்களின் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இதனால், உணவு சங்கிலி சமநிலையில் பராமரிக்கப்படுகிறது. கடலையே நம்பியிருக்கும் மீனவர்களுக்கு இந்த சுந்தரவன காடுகள் ஒரு வர பிரசாதம்.

பிச்சாவரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்டசதுப்புநிலக்காட்டில் சுரப்புன்னை, தில்லை, திப்பராத்தி, வெண்கண்டல், நீர்முள்ளி, பண்ணுக்குச்சி, நரிகண்டல், கருங்கண்டல் எனும் 20 வகையான தாவரங்களும், வங்காரவாசி, உயிரி, கோழிக்கால், உமிரி, சங்குசெடி, பீஞ்சல் உள்ளிட்ட 18 வகையான மூலிகை தாவரங்களும் உள்ளது. இந்த சதுப்பு நில (மாங்குரோவ்) காடுகளில் மூலிகை செடிகள் நிறைந்துள்ளன.

இந்த சதுப்புநிலக்காட்டில்3,500-க்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன. இது இப்பகுதிக்கு இயற்கை அரணாக திகழ்ந்து வருகிறது. சுனாமியின்போது இப்பகுதி மீனவ மக்களுக்கு மிகப்பெரிய அரணாக இருந்ததால் பாதிப்புகள் குறைவாக இருந்தது.

நீர்வாழ் உயிர்களின் பெருக்கத்துக்கு துணையாய் இருக்கும் பிச்சாவரம் சதுப்புநில காடுகள், தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுவதால் மீன் உள்ளிட்ட உயிரினங்களும், கடலில் கலக்கும் வேதிப்பொருள்களால் மாங்ரோவ் காடுகள் கொஞ்சம், கொஞ்சமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இயற்கையின் உணவு சங்கிலி, சம நிலையில் பராமரிக்கப்படுவது பாதிக்கப்படும். இப்பகுதி பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் எம். ஆறுமுகம் கூறும்போது, ‘‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீர் மட்டும் கடும் பாதிப்படையும், பூமி உள் வாங்கும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கும், ஆழ்துளை கிணறு அமைக்க மேலைநாடுகளில் உள்ளதுபோல நமது நாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. விவசாயம், மீன் வளம் அழியும், மாங்ரோவ் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தும் அழிந்துவிடும். தகுந்த பாதுகாப்புடன் ஹைட்ரோ கார்பன் திட்ட கழிவுகளை பராமரித்தால் ஓரளவு பாதிப்பை தவிர்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close