[X] Close

4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்; அரவக்குறிச்சியில் 84.28 சதவீத வாக்குப்பதிவு


4-84-28

  • kamadenu
  • Posted: 20 May, 2019 07:05 am
  • அ+ அ-

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 4 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 99,052 ஆண்கள், 1,06,219 பெண்கள், இதரர் 2 என மொத்தம் 2,05,273 வாக்காளர்கள் உள்ளனர். 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தொகுதி முழுவதும் வாக்காளர்கள் கடுமையான வெயிலிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை 9 மணிக்கு தொகுதி முழுவதும் 10.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை 11 மணியளவில் 34.24 சதவீதம், மதியம் 1 மணியளவில் 52.68 சதவீதம், மதியம் 3 மணியளவில் 66.38 சதவீதம், மாலை 5 மணிக்கு 79.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதியாக 84.28 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சூலூரில் 79.41%, திருப்பரங்குன்றத்தில் 74.17%, ஓட்டப்பிடாரத்தில் 72.61% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்.18-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கு வாக்காளர்களின் இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், இம்முறை இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது. சுமார் 10 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்குப் பிறகும் வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்ததால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களில் அமமுக வேட்பாளர் பி.ஹெச்.சாகுல்ஹமீது மட்டுமே அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளபட்டி உரூஸ் வீதி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பழுதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.

அதிமுக-திமுக வாக்குவாதம்

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் தெரிவித்ததால் இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து திமுகவினர் அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தனர். காவல்நிலையம் முன்பும் இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தளவாபாளையம் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், அருகில் இருந்த சிஎஸ்ஐ சர்ச் பிரார்த்தனையின்போது ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி வெளியே திமுகவினர் சிலர் நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்ததால் அங்கு வந்த அதிமுகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close