[X] Close

உணவுக்கழிவுகளை பயனுள்ள பொருளாக மாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே வாசன் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 19 May, 2019 13:36 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

குப்பைகளையும், உணவுக்கழிவுகளையும், மரக்கழிவுகளையும் பயனுள்ள பொருளாக மாற்றிட தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள குப்பைகளை, உணவுக்கழிவுகளை, மரக்கழிவுகளை மற்றும் பிற பயனற்ற பொருட்களை முறையாக சேகரித்து, தேக்கிவைத்து அவற்றை அறிவியல் முறையில் உரமாகவோ, எரிவாயுவாகவோ, மின்சாரமாகவோ அல்லது மற்ற பயனுள்ள பொருளாகவோ மாற்றி பயன்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

தமிழகத்தில் சென்னையில் வீடுகள், ஹோட்டல்களின் உணவுக் கழிவுகளை உரமாக்க மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டுக்குரியது. எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிராமம் முதல் பெரு நகரம் வரை சென்னை மாநகராட்சி போன்று குப்பைகளை, உணவுக்கழிவுகளை சேகரிக்கவும், அவற்றை பயனுள்ளதாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதாவது அனைத்து வீடுகள், அடுக்குமாடிக்கட்டிடங்கள், கடைகள், ஹோட்டல்கள், அரசு மற்றும் தனியார் சார்ந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பூங்காக்கள், சாலை ஓரப்பகுதிகள் - என எங்கெல்லாம் குப்பைகள், உணவுக்கழிவுகள், மரக்கழிவுகள் கிடைக்கின்றதோ அவற்றை அங்கேயே மக்கச்செய்யவோ அல்லது முறையாக சேகரித்து தேக்கி வைக்கவோ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

குறிப்பாக மழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைக்காலமாக இருந்தாலும் சரி காலம் தாழ்த்தாமல் அந்த குப்பைகளை, உணவுக்கழிவுகளை, இலைக்கழிவுகளை முறையாக நாள்தோறும் அல்லது ஓரிரு நாட்களில் சேகரித்தால் அவை தேக்கம் அடையாமல் தெருக்களில், சாலைப்பள்ளங்களில், மழை நீரில், நீர்த்தேக்கங்களில் கலக்காமல் சுகாதாரம் பாதுகாக்கப்படும், தொற்று நோயும் ஏற்படாது.

 

மேலும் குப்பைகளையும், உணவுக்ழிவுகளையும் மற்ற தேவையற்ற பயனற்ற பொருட்களையும் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உடனடியாக அப்புறப்படுத்தவும், அவற்றை தேக்கிவைக்க குப்பை கிடங்குகளை ஏற்படுத்தி, முறையாக சேகரித்து, தேக்கி வைப்பது தான் மிக மிக முக்கியமானது.

 

அந்த குப்பைகளையும், உணவுக்கழிவுகளையும் காலம் தாழ்த்தாமல் அறிவியல் முறையில் உரமாகவோ, எரிவாயுவாகவோ, மின்சாரமாகவோ அல்லது மற்ற பயனுள்ள பொருளாகவோ மாற்ற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அது மட்டுமல்ல பொது மக்களிடமும், ஹோட்டல் உரிமையாளர்களிடமும் உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது என்பதற்காகவும், குப்பைகளையும், உணவுக்கழிவுகளையும், முறையாக சேகரித்து வைக்கவும், அவற்றை பயனுள்ள பொருட்களாக மாற்ற உதவிட வேண்டும் என்ற விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

 

எனவே தமிழக அரசு - மாநிலம் முழுவதும் உள்ள குப்பைகளையும், உணவுக்கழிவுகளையும், மரக்கழிவுகளையும் மற்றும் மற்ற பயனற்ற பொருட்களையும் பயனுள்ள பொருளாக மாற்றி பயன்படுத்த தனிக்கவனம் செலுத்தி, குழு அமைத்து தொடர் நடவடிக்கை எடுத்து சுற்றுப்புறச் சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாத்து பொது மக்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close