[X] Close

டாஸ்மாக்  ஊழியர்களை கான்கீரிட் கூரைகள் அமைக்க நிர்பந்தம் செய்வதா?-  டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 19:34 pm
  • அ+ அ-

டாஸ்மாக் கடை ஊழியர்களை கான்கீரிட் கூரைகள் அமைக்க நிர்பந்தம் செய்வதை தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் கட்டிடங்களில் வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. இந்தக் கடைகள் வணிக கட்டிடங்களாக இல்லாமல் குடியிருப்பு கட்டிடங்களாகவே உள்ளாட்சி அமைப்புகளில் பதியப்பட்டு வீட்டு வரியும் வசூலிக்கப்படுகிறது. இது குறித்தான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் உள்ளாட்சி அமைப்புகளில் வணிக கட்டிட அனுமதி பெறாமல் உள்ள கடைகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் கட்டிட உரிமையாளர்களிடம்  கட்டிட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் ஊழியர்களை நிர்பந்தம் செய்தது.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக கட்டிட அனுமதி பெறாமல் மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. இதில் தமிழகம் முழுவதும்   1000க்கும் மேற்பட்ட கடைகள் பாதுகாப்பற்ற கல்நார் கூரைகளும், தகடுகளான கூரைகளையும் கொண்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

டாஸ்மாக் கடைகளுக்கான இடம் குறித்தான வாடகை ஒப்பந்தத்தில் கட்டிடத்தின் வரைபடம், வணிக கட்டிட அனுமதி உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் நேரடி ஆய்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புத்தலோடு டாஸ்மாக் கடை அனுமதிக்கப்படுகிறது.  அப்போது கட்டிடங்கள் கல்நார், தகடுகளால் இருப்பதை அதிகாரிகளால் கண்டுகொள்ளாமல் எந்த வகையிலாவது கடைகள் திறப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

தற்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடை ஊழியர்களிடம் கான்கீரிட் தளங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று அவசரம் காட்டி வருவது நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்காகவே என்று டாஸ்மாக் சம்மேளனம் குற்றம் சாட்டுகிறது. கட்டிடத்திற்கான வாடகை பெறும் கட்டிட உரிமையாளரை பொறுப்பாக்காமல் ஊழியர்களிடம் கடை மூடி விடுவோம் என்று  பணி பயத்தை உருவாக்கி ஊழியர்களது செலவில் கான்கீரிட் கூரை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் மிரட்டி வருவது கண்டனத்திற்குரியது.

தனியார் கட்டிடங்கள் வாடகை தொகை நிர்ணயிப்பது, அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வாடகை என பல்வேறு முறைகேடுகளும் நடந்துள்ளன. இப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கடை ஊழியர்களை கான்கீரிட் கூரைகள் அமைக்க நிர்பந்தம் செய்வதை தடுத்து நிறுத்தவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close