ஊருக்குள் உலா வந்த கரடி - ராஜபாளையம் அருகே அதிர்ச்சி!


விருதுநகர்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் இன்று அதிகாலையில் கரடி ஒன்று சுற்றித் திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் நாய்கள் குறைக்கும் சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீட்டைவிட்டு வெளியில் வந்து பார்த்த போது, கருப்பாக ஓர் உருவம் நாய்களை துரத்திச் சென்றுள்ளது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, கரடி ஒன்று 3 மணி நேரத்திற்கு மேலாக குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராஜபாளையம் வனத்துறையினர் தளவாய்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் கரடியை தேடி வருகின்றனர். தளவாய்புரத்தில் இருந்து புத்தூர் செல்லும் வழியில் கரடியின் காலடி தடத்தை கண்டறிந்த வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் கரடி உலா வரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக உடனடியாக கரடியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.