இரட்டை இலையுடன் மாங்கனி இருப்பதால் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு


மதுரை: இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி சின்னத்திற்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று மதுரையில் கூறியுள்ளார்.

சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், "பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க முடியும். இதை அரசு தான் செய்ய வேண்டும். சசிகலா தொண்டர்களை சந்திக்க வருகிறார், அதை வரவேற்கிறேன். மேலும், 90 சதவீத அதிமுக தொண்டர்களை இணைத்து விட்டோம் என அவர் கூறியதையும் நாங்கள் வரவேற்கிறோம்.

மன்னிப்புக் கடிதம் கொடுத்தாலும் ஓபிஎஸை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். என்னை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்?. அதிமுக பொதுச்செயலாளராக இருப்பதாக எடப்பாடி வேண்டுமானால் கூறலாம். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை. ஆனாலும், இரட்டை இலையுடன் மாங்கனி சின்னம் இருப்பதால் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என ஓபிஎஸ் கூறியுள்ளார்.