[X] Close

ரயிலில் பெண்களை குறிவைத்து திருட்டு; மலேசிய ஓட்டல் அதிபர் கைது: விமானத்தில் வந்து காரியம் முடித்தது அம்பலம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 20:09 pm
  • அ+ அ-

ரயிலில் முதல் வகுப்பு பெண் பயணிகளை குறிவைத்து கடந்த பல ஆண்டுகளாக நகை திருடிய மலேஷிய ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில் ஹோட்டல், 3 மனைவிகள், ஆடம்பர வீடு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரயில்களில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் குடும்பத்தினரின் நகைகள் அடிக்கடி திருட்டுப்போவதாக கடந்த பல ஆண்டுகளாக புகார் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் குற்றவாளி சிக்காமல் இருந்தார்.

ஏசிப்பெட்டிகளில் பெரும்பாலும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மட்டுமே பயணம் ச்எய்யும் நிலையில் அதில் பயணம் செய்யும் நபர்கள் திருட வாய்ப்பு குறைவு என்பதால் போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில் தொடர் திருட்டு நடந்துவந்தது.

இதனால் போலீஸார் கடந்த பல ஆண்டுகளாக ரெயிலில் திருட்டு நடந்த நேரத்தில் பயணம் செய்தவர்கள் லிஸ்ட்டையும், அந்த நேரத்தைய சிசிடிவி காட்சிகளையும், செல்போன் எண்களையும் ஒப்பிட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவந்தது.

ஒவ்வொரு திருட்டின்போதும் ஒரு குறிப்பிட்ட நபர் அங்குள்ள முதல்வகுப்பு பெட்டியில் பயணம் செய்தது தெரியவந்தது, மேலும் அவர் பாதி வழியிலேயே இறங்கியதும், பலரிடமும் போலியாக தன்னை மிகப்பெரிய கம்பெனியின் சிஇஓ என அறிமுகப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது.

அவர் கொடுத்த விசிட்டிங் கார்டு போலி என தெரியவந்ததால் அவரது அடையாளத்தை போலீஸார் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. இதையடுத்து அவர் குறித்த விபரங்களை சேகரித்த போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் கடந்த 7-ம் தேதி சென்னைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர் அறியாமலேயே வலைவிரித்த போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். டிப்டாப் உடையுடன், கையில் பிரேஸ்லெட், கழுத்தில் செயின், ஆப்பிள் லாப்டாப், ஆப்பிள் ஐபோனுடன் வந்த அந்த நபரைப்பார்த்த போலீஸாருக்கு ஒருகணம் சந்தேகம் வந்துள்ளது.

நாம சரியான ஆளைத்தான் பிடிக்க வந்துள்ளோமா என யோசித்த போலீஸார், பிடிக்க வந்த ஆள் இவர்தான் என முடிவு செய்து நீங்கள்தான் சாஹுல் ஹமீதா என போலீஸார் கேட்க ஆமாம் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளார் அந்த நபர்.

நீதான் வேண்டும் என அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று கவனிக்கிற விதத்தில் கவனித்தவுடன் அவர் கூறிய தகவல் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலேசியாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹோட்டலை தானும் இன்னும் இருவரும் சேர்ந்து நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

சரி ஏன் இந்த திருட்டுப்புத்தி என போலீஸார் கேட்க ஹோட்டல் நடத்துவதில் மூன்று பார்ட்னர்களில் ஒருவர் சரியில்லை, அதனால் அவரைக் கழற்றி விடணும் என்றால் அவருடைய பங்கைக் கொடுக்கணும் அதற்கு பணம் தேவை அதற்காகத்தான் திருடினேன் என்று கூறியுள்ளார்.

ரெயிலில் முதல்வகுப்பில் செல்லும்போது அதில் வரும் வசதியானவர்கள் சாதாரணமாக நகைகளை அணிந்து அலட்சியமாக இருப்பதைப்பார்த்தேன், அதனால் நாம் திருடும் சரியான இடம் இதுதான் என முடிவு செய்து ரெயிலில் மட்டுமே திருடினேன் என்று கூறியுள்ளார்.

தனக்கு ஆறு மொழிகள் சரளமாக பேசத்தெரியும் என்பதாலும், பணக்காரத் தோற்றத்துடன் ஐபோன், லாப்டாப் என பயணம் செய்யும் தான் மற்றவர்களிடம்  எளிதாக நெருங்க முடிந்தது. ரெயில் புறப்பட்ட சில மணி நேரம் கழித்து  இரவு 2 மணி, 3 மணி அளவில் அனைவரும் அசந்து தூங்குவார்கள்.

அப்போது தான் பெண்களின் நகைகயை திருடுவேன், பக்கத்து பெட்டிகளுக்கும் சென்று திருடுவேன், யாராவது சந்தேகப்பட்டு எழுந்து கேட்டால் பெட்டி மாறி வந்து விட்டதாக சமாளிப்பேன், என் தோற்றத்தைப் பார்த்து சந்தேகப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட தாம் திருச்சூரை சேர்ந்தவர் என்றும் தனது முதல்மனைவியை விவாகரத்து செய்துவிட்டு  சஹானா என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மனைவி சஹானாதான் மலேஷியா ஹோட்டலைப் பார்த்துக்கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

 மலேசியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து பின்னர் ரயில்களில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு செய்து நகைகளை திருடி அவற்றை மும்பை மற்றும் திருச்சூரில் விற்று பணமாக்கியதாக தெரிவித்துள்ளார். 

இதுவரை தமிழகத்தில் 29 ரயில்களில் அவர் திருடியதாக கூறப்பட்ட  36 லட்சம் ரூபாய் மதிப்பிலான 110 சவரன் நகைகளை திருச்சூர் மற்றும் மும்பையிலிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.  பெண் பித்து உள்ள சாஹுல் ஹமீது பலாத்கார வழக்கில் நாக்பூர் மற்றும் பாலக்காடு போலீஸாரால் 2012-ல் கைது செய்யப்பட்டவர், தற்போதும்  ஜாஸ்மீன் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர் மலேசியாவில் வைத்திருக்கும் ஓட்டலில் அல்ஜீரியா, பிரான்ஸ், உஸ்பெஸ்கிஸ்தாப், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண்களை வரவழைத்து தொழிலதிபர்களை வரவழைத்து மாடல் ஷோ எனும் பெயரில் சட்டவிரோதமாக தொழில் செய்து வந்ததும், அவ்வாறு வந்த அல்ஜிரிய நாட்டுப் பெண்ணான ஜாஸ்மின் என்பவரை 3 வது திருமணம் செய்ய உள்ள நிலையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் மேலும் விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். சாகுல் ஹமீது பல ஆண்டுகளாக கோடிக்கணக்கில் நகைகளை திருடி இருக்க வாய்ப்புண்டு. ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பலர் நகைகளை திருட்டுக்கொடுத்துவிட்டு இன்றும் அலையும் நிலை உள்ளது.

ஆகவே சாகுல் ஹமீதை விரிவாக விசாரணை நடத்தினால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருந்தாலும் சிக்குவார்கள் 110 சவரன் என்பதெல்லாம் மிக்ககுறைவான ஒன்று என 50 சவரன் நகையை 3 ஆண்டுகளுக்கு முன் பறிகொடுத்து இன்றுவரை நகைக்கிடைக்காமல் அலையும் பயணி ஒருவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close