தஞ்சாவூர் டைடல் பார்க்கை முதல்வர் திறந்து வைப்பார்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!


தஞ்சாவூர்: புதிதாக கட்டப்பட்டு வரும் டைடல் பார்க்கை தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் கட்டப்பட்டு வரும் புதிய டைடல் பார்க் பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த விவசாயிகளின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற முயற்சியில் தமிழக முதல்வர் தஞ்சாவூரில் டைடல் பார்க்கை அமைத்துள்ளார். இதன் கட்டுமான பணிகள் முடிந்து சில வாரங்களில் தமிழக முதல்வர் இதனைத் திறந்து வைப்பார்.

தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு உருவாக்கவும், மிகப்பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தவும், தமிழக முதல்வரும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆகியோரது, ஒத்துழைப்போடு, அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மிகப்பெரிய புதிய முயற்சிகள், திட்டங்கள் வரப்போகின்றன.

மேலும், தஞ்சாவூரில் அமைய உள்ள சிப்காட்டில் பல புதிய நிறுவனங்கள் அமைய உள்ளன. இங்கு படித்த மற்றும் ஏழை எளியவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதே போல், சிப்காட் அருகில் உள்ள காசநோய் மருத்துவமனை அகற்றப்பட மாட்டாது. இந்த மருத்துவமனை அகற்றப்படும் எனும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். முற்றிலும் உள்நோக்கத்துடன் கிளப்பப்படுகின்ற புரளியாகும். இது போன்ற தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிப்காட் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கும், டைடல் பார்க் மூலம் ஆயிரக்கானோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், இன்னும் அதிகமான நிறுவனங்கள் டைடல் பார்கில் பதிவு செய்தால் அருகில் உள்ள பகுதியில் புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோல் விழுப்புரத்தில் பணிகள் முடிந்து இயங்கி வருகிறது. திருப்பூரில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, ஊட்டி, மலைவாழ் மக்களுக்கான தொழில் சார்ந்த முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.6 லட்சத்து 94 ஆயிரம் கோடி தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது போன்ற முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வந்தால் தான் தமிழகம் வளரும்” என அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: "விவசாயம் சார்ந்த தொழில்கள் கொண்டு வருவதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளன. கடந்தாண்டை விட நிகழாண்டு 5 சதவீதம் கூடுதலாக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது எம்.பி-கள் எஸ்.கல்யாணசுந்தரம், முரசொலி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.