[X] Close

இழுபறியாக இருக்கும் தேர்தல் நிலவரம்: திருப்பரங்குன்றத்தில் கட்சிகளின் ‘கணக்கு’ பலிக்குமா?


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:41 am
  • அ+ அ-

-சுப.ஜனநாயகச்செல்வம்

முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங் குன்றம் தொகுதியில் இம்முறை வெற்றிபெறப்போவது யார் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்.18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த 22 தொகுதிகளில் அதிக அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் அதிமுக உள்ளது. இதனால் அக்கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு உத்திகளை வகுத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், 17 மாவட்ட பொறுப் பாளர்கள் என்று பெரும் படையே களமிறங்கி வாக்குச் சேகரித்து வருகிறது. இதேபோல், எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக சார்பிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

வேட்பாளர் பா.சரவணனைஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச் சர்கள் டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, பொன்.முத்துராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

அதற்கு இணையாக அதிமுக ஆட்சியை கலைத்தே தீருவது என்ற நோக்கத்துடன் அமமுகவினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் களமிறங்கியுள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர் இ.மகேந்திரனை ஆதரித்து பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன், நிர்வாகிகள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் பல கட்டங்களாக பிரச்சாரம் செய்தனர். அதேபோல், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் பிரச்சாரம் செய்தார்.

பிரதான கட்சிகளின் வேட்பா ளர்கள், சுயேச்சைகள் உட்பட 37 பேர் களத்தில் இருந்தாலும், அதிமுக, திமுக, அமமுக ஆகியவை இடை யேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியில் கடந்த தேர்தல்களில் அதிமுகவே அதிக முறை வென்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாகத் திகழும் இத்தொகுதியில் இம்முறை அதன் வாக்குகளை அமமுக பிரிக்க வாய்ப்புள்ளது. இது எந்த கட்சிக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்களுக்குத்தான் சாதகம் எனக் கூறும் திமுகவினர், கூட்டணி கட்சிகளின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் ஆகியவை அனைத்தும் சேர்ந்து தங்களின் வெற்றி உறுதி என்று கூறி வருகின்றனர். அமமுகவினரோ, அதிமுக மற்றும் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள், சிறுபான்மை வாக்குகள் ஆகியவற்றைப் பெற்றாலே எங்களுக்கு வெற்றிதான் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதை மறுக்கும் அதிமுகவினர், தங்கள் கட்சியின் வாக்குகள், கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எங்கள் வேட்பாளருக்கு கிடைத்தாலே எங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் இப்போதும் திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை தான் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர்களின் வாக்குகள் பெரும் அளவில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சென்றால், அது பிரதான கட்சிகளுக்குபாதிப்பைஏற்படுத்தும். அதே நேரம், கட்சிகளை சாராத நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகள் எந்த பக்கம் சாய்கிறதோ அந்த வேட்பாளரே வெற்றி பெறுவார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close