தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதங்கம்


புதுடெல்லி: தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 5ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் இந்த கொலை சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை, அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொல்லும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மிகவும் சீர் குலைந்துள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலையானது, தமிழ்நாட்டில் திமுக அரசின் ஒட்டு மொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் அடையாளம். தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியல் சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. 10 நாள்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ராகுல் காந்தியோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவோ அங்கு செல்லவில்லை. ஹாத்ரஸ் உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கோ அல்லது கள்ளக்குறிச்சிக்கோ செல்லவில்லை? அவர் தமிழ்நாட்டை மறந்துவிட்டாரா? தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த 2022 மார்ச் மாதம், 22 வயது பட்டியலின பெண், 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் திமுக இளைஞரணி நிர்வாகிகள். அதே ஆண்டு மே மாதம் பாலச்சந்தர் என்ற பட்டியலின சமூகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி, சென்னையில் கொலை செய்யப்பட்டார்.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் 24 மாவட்டங்களில் 386 கிராமங்களில் ஆய்வு நடத்தினர். இதில் 22 கிராமங்களில் ஊராட்சித் தலைவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுபோன்ற தீண்டாமைகள் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன.” இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.