புதிய சட்டங்களில் குளறுபடி உள்ளதால் அதில் உள்ள சிக்கல்களைத் திருத்த புதுச்சேரி மாநில அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சட்ட வல்லுநர்களை கொண்ட குழுவை முதல்வர் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று சந்தித்து இது தொடர்பான மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டத்தை இந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் ஜூலை 1-ம் தேதியில் இருந்து பெயர் மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தச் சட்டமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இயற்றப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் 348-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைதாகும் நபர்களுக்கு கைவிலங்கு போடக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை எடுத்துரைத்துள்ளது. ஆனால், கைவிலங்கு போடும் அதிகாரத்தை காவல்துறைக்கு இப்புதிய சட்டம் வழங்கியுள்ளது. ஒரு குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை 15 நாட்களுக்குள் மனு செய்து அவரை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கலாம் என இருந்ததை தற்போது 90 நாட்கள் வரை காவல் விசாரணைக்கு மனு போடும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியுள்ளது. இது அபத்தமான முடிவாகும்.
இப்படி புதிய சட்டங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டங்களில் அடிப்படை பிரிவுகளில் உள்ள தவறுகளை திருத்தவும், இந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் பெயர் வைத்துள்ளதை மீண்டும் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யவும் உரிய ஆலோசனைகளை வழங்க புதுச்சேரி மாநில அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சட்ட வல்லுநர்களை கொண்ட குழுவை முதல்வர் அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.