[X] Close

மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே இளைஞர்களை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் 4 பேர் கைது


4

  • kamadenu
  • Posted: 16 May, 2019 09:04 am
  • அ+ அ-

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே இளைஞர்களை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கணபதி அருகேயுள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் பிரதீப்(19). கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி, பிரதீப் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் பிரதீப் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு, நண்பர் தமிழ்வாணன்(22) என்பவருடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது இவர்களை வழிமறித்த நான்கு பேர் கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன. இறுதியில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறும் போது,‘‘இந்த சம்பவம் தொடர்பாக கணபதி திலகர் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வெள்ளை சதீஷ்(25), பகத்சிங் 2-வது வீதியை சேர்ந்த ஹரிஹரன்(25), அன்னை சத்யா நகரை சேர்ந்த தனபால்(24), பகத்சிங் 3-வது வீதியை சேர்ந்த சூர்யா(24) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகிறோம்” என்றார்.

ரேஸ்கோர்ஸ் போலீஸார் கூறும் போது,‘‘சதீஷ், சூர்யா ஆகியோர் முன்னரே ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர். முன்விரோதம் காரணமாக இவர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 5 அரிவாள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

4 பேரும் அளித்த வாக்குமூலத்தில்,‘‘ஜாமீனில் வெளியே வந்த பிரதீப், எங்கள் நண்பரை வெட்டியது போல், எங்களையும் கொல்ல திட்டமிட்டதாக கேள்விப்பட்டோம். இதனால், அவர் எங்களை கொல்வதற்குள், நாங்கள் அவரை கொல்ல திட்டமிட்டோம். இதனால் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பும் போது, பிரதீப்பையும், அவருடன் வந்த தமிழ்வாணனையும் வெட்டினோம்’’ எனக்கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close