20 அம்ச கோரிக்கைகள் நிராகரிப்பு: தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் திடீர் போராட்டம்!


சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்சார வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மின்சார வாரியத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மின்வாரிய தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் முதல் மின்பாதை ஆய்வாளர்கள் வரை விபத்துக்குள்ளாகி மரணமடையும் நிலை உள்ளது.

இந்நிலையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் அநீதிகளை களைய வேண்டும், அரசாணை 6 மற்றும் 7-ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தொழிலாளர்கள் நல ஆணையத்தில் நேற்று சுமார் 3 மணி நேரம், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் இன்று மாநிலம் முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக மின்சார வாரிய அலுவலகங்களில் பணிகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.