இது தமிழ்நாடு… இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை


காலணி வீசிய பாஜகவினர்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவிற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தன் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அமைச்சர்கள் அந்த, அந்த மாநிலத்தில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. அவருக்கு இந்நேரத்தில் நன்றியை நெஞ்சில் நிறுத்துகிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்துவிடலாம் என நினைப்பவர்கள் தாங்கள் தான் தேசபக்திக்கு ஒட்டுமொத்தக் குத்தகைதாரர்கள் என்பதுபோல் வரம்பு மீறுவது வாடிக்கையாகி வருகிறது.

ராணுவ வீரர் லட்சுமணன் மறைவுக்கு நானும் இரங்கல் தெரிவித்திருந்தேன். மரபார்ந்த மரியாதையைச் செலுத்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பணித்திருந்தேன். தேசியக்கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது காலணி வீசி, விடுதலைநாள் விழாவின் மகத்துவத்தையே மலினப்படுத்தி விட்டார்கள். இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை நேரில் சந்தித்து தன் செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், இனி அவர்களது சங்காத்தமே வேண்டாம் என வந்துள்ளார். வீசிய காலணியை உரியவர் வாங்கிக்கொள்ளலாம் என பதிவிட்டு தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை நிதி அமைச்சர் அம்பலப்படுத்தி உள்ளார். அமைச்சர் கார் மீது காலணி வீசி, தேசியக்கொடியை அவமதித்து கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும். இது தமிழ்நாடு. இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.

திமுக அறவழியில்தான் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. வெற்றியும் பெற்றுள்ளது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் வந்துவிடக்கூடாது என கவனத்துடன் ஆட்சியும், கழகமும் செயல்பட்டு வருகிறது. இதைச் சாதகமாக நினைத்துக்கொண்டு சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என உறுதிமொழியும், உத்தரவாதமும் வழங்குகிறேன் ”என்று கடிதம் எழுதியுள்ளார்.

x