தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்ததன் மூலம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு, “அரசியலுக்கு வரமாட்டேன்” என்று அவர் சொன்னாலும், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ரஜினியை வைத்து ஏதோ ரம்மி ஆடப் போகிறது பாஜக என்கிறார்கள்.
அரசியலுக்கு வருவதாகச் சொல்லிச் சொல்லியே காலம் கடத்திய ரஜினி, 2017 டிசம்பர் 31-ல் தனிக் கட்சி தொடங்கும் பிரகடனத்தைச் செய்தார். 2021 சட்டப் பேர்வைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று சொன்ன ரஜினி, “சிஸ்டம் சரியில்லை” என்று அப்போதைய அதிமுக ஆட்சியை மறைமுகமாக சாடினார்.
இப்படியெல்லாம் பேசி அதிரடி காட்டியவர் அதன் பிறகு ஓராண்டு ஆகியும் கட்சி ஆரம்பிக்கும் அறிகுறியே தெரியவில்லை. இதனால் மன்ற நிர்வாகிகள் சோர்ந்து போயிருந்த நிலையில், 2020 டிசம்பர் 31-ல் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக ட்விட் போட்டு மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்தார் ரஜினி.
"தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதால், 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச்சார்பற்ற ஆன்மிக அரசியலும் ஆட்சியும் அமைவது நிச்சயம். மாத்துவோம்; எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று பேசியது ரஜினியின் ட்விட்டர் பதிவு.
இப்படிச் சொல்லிவிட்டு மீண்டும் கரோனாவைக் காரணம் காட்டி அந்தர் பல்டி அடித்த ரஜினி, 2020 டிசம்பர் 20-ல், "அரசியலுக்கு வர முடியவில்லை. மன்னியுங்கள்" என ட்விட்டரில் தனது மூன்று பக்க கடிதத்தை வெளியிட்டு ஜகா வாங்கினார். இதன் மூலம், இனிமேல் ரஜினி நேரடி அரசியலுக்கு வரவேமாட்டார் என்பது உறுதியாகிப் போனதால் மன்ற நிர்வாகிகள் பலரும் தங்களுக்குப் பிடித்தமான கட்சிகளில் இடம்பிடித்துக் கொண்டார்கள்.
ரஜினியை வைத்து தமிழகத்தில் தங்களது அரசியல் ஆட்டத்தைக் காட்டலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்த பாஜகவுக்கு ரஜினியின் அரசியல் துறவறம் பெருத்த ஏமாற்றமானது. ஆனாலும், அவரை வைத்து தமிழக அரசியலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சிகளை பாஜக கைவிடவில்லை.
இந்த நிலையில் தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினி சந்தித்தது மீண்டும் அரசியல் அவலாகி இருக்கிறது. பாஜகவினருக்கு இந்த சந்திப்பு மெத்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. நான் யார் பக்கம் இருக்கிறேன் என்பதை இதன் மூலாம் ரஜினி வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டதாக ஆர்ப்பரிக்கிறது பாஜக முகாம்.
இது குறித்து தென் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "75-வது சுதந்திர தின விழாவை சிறப்பான வகையில் நடத்த 'சுதந்திர அமிர்த பெருவிழா' கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான கமிட்டியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கமிட்டியில் நடிகர்கள் ரஜினிகாந்த், அனுபம்கெர் ஆகியோரும் உள்ளனர். இந்தக் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம், ஆகஸ்ட் 6-ம் தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தலைவர் ரஜினியிடம் அவரின் உடல்நலன் குறித்து பிரதமர் மோடி விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே தமிழக ஆளுநரை ரஜினி சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து இருவரும் பேசியிருக்கலாம். தாங்கள் அரசியல் பேசியதை தலைவரும் மறைக்கவில்லை. ஆனால், இதைவைத்தெல்லாம் அவர் நேரடி அரசியலுக்கு வரப்போகிறார் என்று சொல்வதை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார்கள் அவர்கள்.
"ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல" என ஆளுநர் - ரஜினி சந்திப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்க, " ரஜினியிடம், ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது" என்று பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தோழர்கள், “ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக அரசியல் நாடக ஆடுகிறார். இப்படிச் சொல்பவர் தான், தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தமிழக நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஆளுநருக்கு ரஜினி நன்னடத்தை சான்றிதழ் அளிக்கிறார் என்றால் அதற்கு மத்திய அரசின் நெருக்கடியே காரணம். ரஜினியை மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்த பாஜக முடிவெடுத்துள்ளது. அவர் நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் மத்திய பாஜக அரசின் திட்டங்கள் குறித்தும், மோடி குறித்தும் தேர்தல் சமயத்தில் கட்டாயம் பேசுவார். மொத்தத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ரஜினி இருப்பார்” என்கிறார்கள்.
இது தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டதற்கு, “ஆளுநர் யாரைச் சந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அரசியல் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆளுநராக இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் அவருக்குக் கிடையாதா? தமிழகத்தில் எந்த ஆதரவும் இல்லாத நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர். எனவே அவர்கள் சொல்வதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசினால் இவர்களுக்கு என்ன பிரச்சினை? மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பாரா மாட்டாரா என்பதை அவர் தான் முடிவுசெய்ய வேண்டும். அதற்குள்ளாக இவர்கள் எதற்காக இத்தனை பதற்றப்படுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “தங்கள் கட்சியில் ரஜினியைச் சேர்த்துக்கொள்ள பாஜக விரும்புகிறது. அதற்காக அது ரஜினியைச் சுற்றிவருகிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக, தான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக ரஜினியிடம் ஆளுநர் சொல்லியிருப்பார். அதை ரஜினியும் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார். உண்மையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும். ஆளுநரை வைத்து அரசியல் செய்யும் பாஜக, தற்போது ரஜினி மூலம் ஆதாயம் தேட நினைக்கிறது. ஆனால், அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினி உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு மேற்கு வங்க ஆளுநர் பதவியை வழங்க பாஜக விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியவர் ரஜினி தான்” என்றார்.
முன்பெல்லாம் தனது படம் ரிலீஸுக்கு வரும்போது அரசியல் பேசி ட்ரெண்ட் ஆவார் ரஜினி. இப்போதைக்கு படம் ரிலீஸ் இல்லை என்பதால் ஆளுநரைச் சந்தித்து அரசியல் பேசியிருக்கிறார். அதுவும் இப்போது ட்ரெண்டாகி இருக்கிறது. எண்ட் என்னாகும் என்பது பாஜகவுக்கே வெளிச்சம்!