[X] Close

நான் எந்த உறுதிமொழியை மீறினேன்? விரோதமாகப் பேசினேனா?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 16:06 pm
  • அ+ அ-

நான் எந்த உறுதிமொழியை மீறினேன்? விரோதமாகப் பேசினேனா? கமல்ஹாசனைக் கண்டித்தால் தவறா? எங்களைப் போன்றவர்கள் கேட்கத்தான் செய்வோம் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் நாதுராம் கோட்சே" என, கமல்ஹாசன் பேசியதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்திருந்தார். "கமல்ஹாசனின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள்", என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.

அதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கமல்ஹாசன் கட்சி ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பா? அவர்கள் செய்தது அனைத்தும் தில்லுமுல்லு. சமுதாயச் சீர்கேட்டை உருவாக்கி, மத நல்லிணக்கத்தைக் கெடுப்பது போல பேசிய கமல்ஹாசனைக் கண்டிக்க முடியவில்லை.

நான் என்ன பயஙகரவாதத்தைத் தூண்டியது போல் பேசினேனா? என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என ஏன் சொன்னார்?

இலங்கையில் ஐஎஸ் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் ஒன்றும் அறியாத மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த கிறிஸ்தவ மக்களுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பிருக்கிறதா? ஆனால், பலியாகியிருக்கின்றனர்.

அந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்துகின்றனர். தன் பிள்ளை இறந்தாலும் பரவாயில்லை என நினைக்கக்கூடியவர்தான் பயங்கரவாதி. அவருக்கு மதம், மொழி என்ற காரணமில்லை. அவர் இந்துவாக, இஸ்லாமியராக, கிறிஸ்தவராகக் கூட இருப்பார்கள்.

அதனால், ஒரு மதத்தைச் சொல்லி சொல்லவே கூடாது. இன்றைக்கு இலங்கையில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பரிதாபக் காட்சிகளைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நிலை இந்த நூற்றாண்டிலும் வேண்டுமா?

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கும், முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு செல்லவும் பயப்படுகிறார்கள். நமக்கும் இலங்கைக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. இலங்கையில் குண்டு வெடித்தால் தமிழகம் அலறும். தமிழகத்தில் குண்டு வெடித்தால் இலங்கை அலறும்.

இந்த சூழ்நிலையில் கமல் இப்படிப் பேசுகிறார். பிரிவினை காலகட்டத்தில் எத்தனை இஸ்லாமியர்கள், எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் தெரியுமா? அப்படி கொல்லப்பட்டவர்களின் ரத்தம் வாகா எல்லையில் ஒன்று சேர்ந்தது. பாரத மாதா கண்ணீர் விட்டார்.

கமல் பேசுவது இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலை. இதைச் செய்யக்கூடாது. ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா? ஏன் சண்டையை உருவாக்க நினைக்கிறார்? இதனை மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும்.

என்னுடைய கருத்து என்பது மக்களின் கருத்து. எல்லா மதத்தினரும் தமிழகத்தில் உறவினர்களாக இருக்கின்றனர். நான் இஸ்லாமியர் யாரையாவது பார்த்தால் 'அப்பு' என்றுதான் அழைப்பேன். கிறிஸ்தவ பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறேன்.

கமல்ஹாசன் பிரிவினைவாத - மதவாதத்தைத் தூண்டுகிறார். அவர் மன்னிப்பு கேட்டால், நான் சொன்ன கருத்துக்கும் மன்னிப்பு கோருகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. அவர் திருந்துவதற்கான வாய்ப்பாகத்தான் என் வார்த்தையைப் பதிய வைத்தேன். அதனை ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அராஜகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை அவரால் இப்படிப் பேச முடியுமா? இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பேச்சாளர்கள், கி.வீரமணி ஆகியோர் வரிசையில் கமல்ஹாசனும் சேர்ந்திருக்கிறார்.

தேர்தல் வந்தால் மட்டும் கோயிலுக்குச் செல்கின்றனர். நாங்கள் மதப் பாகுபாடு இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் செல்கிறோம்.

கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்த கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்கவே தகுதியில்லாதவர். அவர் இத்தாலி நாட்டுக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்துக்களை இப்படிப் பேசுவது மடத்தனம், முட்டாள்தனம்.

கி.வீரமணி அப்படித்தான் பேசுவார். அவர் திமிராகப் பேசுகிறார். அவரை அடக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் அடக்குவார்கள்.

நான் எந்த உறுதிமொழியை மீறினேன்? விரோதமாகப் பேசினேனா? கமல்ஹாசனைக் கண்டித்தால் தவறா? எங்களைப் போன்றவர்கள் கேட்கத்தான் செய்வோம்.

இந்திய தேர்தல் ஆணையம் இந்தக் கட்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். கட்சியை முடக்க வேண்டும். கமல்ஹாசன் தனிமனித ஒழுக்கமில்லாதவர்".

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close