[X] Close

சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் 75 நிமிடங்கள் சந்திப்பு: 3-வது அணிக்கு அழைத்த சந்திரசேகர ராவ்; காங்கிரஸ் அணியில் இணைய ஸ்டாலின் வலியுறுத்தல்


75-3

  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:37 am
  • அ+ அ-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது 3-வது அணிக்கு வருமாறு சந்திரசேகர ராவும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலினும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 11-ல் தொடங்கி 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

அதற்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி, ஆட்சி அமைப்பது குறித்து முக்கிய அரசியல் கட்சிகள் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன.

தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதிகட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், கடந்த 6-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசினார். நடப்பு அரசியல் சூழல்கள், நடக்கப் போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்துதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்திரசேகர ராவ் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தெலங்கானாவில் காங்கிரஸுக்கு எதிராக அவர் அரசியல் நடத்தி வருவதாலும், காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருப்பதாலும் இந்த சந்திப்பை ஸ்டாலின் தவிர்க்க விரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த சந்திரசேகர ராவ், தரிசனம் முடிந்ததும் சென்னை வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். மாலை 4.25 மணிக்கு தனது இல்லத்துக்கு வந்த சந்திரசேகர ராவை ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்து, கருணாநிதியின் சிலையை பரிசாக அளித்தார்.

மாலை 5.40 வரை 75 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுவரை நடந்து முடிந்துள்ள 6 கட்ட தேர்தல்கள், ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்புகள், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து வெளியான செய்திகள் குறித்தும், நடப்பு அரசியல் சூழல்கள், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடக்கப் போகும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணிக்கு அழைப்பு விடுத்த சந்திரசேகர ராவ், "காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் போன்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள்தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகிறார்கள். திமுகவும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே, 1996 போல 3-வது அணி தலைமையிலான ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

ராவின் அழைப்புக்கு பதிலளித்த ஸ்டாலின், "காங்கிரஸுடன் திமுகநீண்டகாலமாக கூட்டணியில் உள்ளது. ராகுல் காந்தியை திமுகதான் முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. காங்கிரஸ் குறைந்தது 150 இடங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. ராகுல் காந்தி தலைமையில் கூட்டணி ஆட்சிக்கும் அக்கட்சி தயாராக உள்ளது.

3-வது அணி அமைத்தால் யார் பிரதமர் என்பதை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்படும். 3-வது அணி ஆட்சி நிலைத்து நிற்க காங்கிரஸ் கட்சியோ, பாஜகவோ அனுமதிக்காது. 1996 போல குறுகிய காலத்திலேயே ஆட்சி கவிழ்ந்துவிடும். தமிழக அரசியல் சூழலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை.

எனவே, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆதரவளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர ராவ், ஸ்டாலின் இருவரும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸை எதிர்க்கும் சந்திரசேகர ராவை சந்தித்திருப்பது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close