[X] Close

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்: மகளின் திருமண வரவேற்பில் வெட்டிக்கொலை; மனைவி படுகாயம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 20:15 pm
  • அ+ அ-

சென்னை அயனாவரத்தில் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், அவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

சென்னை அயனாவரம், திக்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெபசீலன் (47) ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது மனைவி பிரிசில்லா (40). இவர்களுக்கு  ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஜெபசீலனின் மகள் ஷீபா ராணிக்கு கடந்த 10-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது.

அதற்கான திருமண வரவேற்பு நேற்று மீஞ்சூரில் நடந்தது. அனைவரும் திருமண வரவேற்புக்குச் சென்றுவிட ஜெபசீலன் தனது மனைவியுடன் மாலை 7 மணி அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தை ஐந்துபேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. ஜெபசீலன் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டியது. அவர் மனைவி பிரிசில்லா இதைப் பார்த்து அலறியபடி குறுக்கே புகுந்து தடுத்ததில் அவருக்கு கைகளில் வெட்டு விழுந்தது. விரல்கள் துண்டாகின.

பிரிசில்லாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை தொடர்பாக அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த நளினி என்பவர் மகளுக்கும் ஸ்டாலின் என்பவர் மகனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் 17 வயது சிறுமி எனப் புகார் வந்து திருமணம் நிறுத்தப்பட்டது. இந்தத் திருமணம் நடைபெறாமல் போனதற்கு ஜெபசீலன்தான் காரணம் என்றும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கொலை செய்த கும்பலைச் சேர்ந்த காம்பு (எ) வினோத், வெள்ளை, ராகுல் மற்றும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தனது மகளின் திருமண வரவேற்பு தினத்தன்று தந்தை கொலை செய்யப்பட, தாயார் படுகாயம் அடைந்தது திருமண வீட்டில் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close