[X] Close

சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை கும்பிட்டுப் போக வந்தார்: மூன்றாவது அணி என்று சொன்னாரா?- கே.எஸ்.அழகிரி காட்டம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 16:57 pm
  • அ+ அ-

சந்திரசேகர் ராவ் மதுரை மீனாட்சி அம்மனைக் கும்பிட்டுவிட்டு ஸ்டாலினை கும்பிட்டுப் போக வந்தார். அவர் மூன்றாம் அணி என்று சொன்னாரா? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோபமாகக் கேட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளனர். ராகுலும் ஸ்டாலினும் நெருக்கமாக உள்ளனர். இந்தியாவில் எந்தக் கட்சியும் சொல்லாத நிலையில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்றார் ஸ்டாலின்.

அவ்வளவு நெருக்கமான திமுகவை மூன்றாவது அணிக்குக் கொண்டுவர இடதுசாரிகளுடன் சேர்ந்து சந்திரசேகர் ராவ் முயற்சி எடுத்து வருகிறார். மம்தா, அகிலேஷ், மாயாவதி ஆகியோரையும் சந்தித்து மாபெரும் மூன்றாவது அணிக்கு சந்திரசேகர் ராவ் முயற்சி எடுத்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சந்திரசேகர் ராவ் சந்திப்புக்கு அப்பாயின்மென்ட் தராத திமுக, இன்று அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்துள்ளது. இது காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடி என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கக்கன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சந்திரசேகர் ராவ்- ஸ்டாலின் சந்திப்பு குறித்துக் கேட்டபோது இது குறித்து கோபத்துடன் பதில் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கூறியதாவது.

''மூன்றாவது அணி அமைக்கப் போகிறேன். அதற்காக நான் பினராயி விஜயனைச் சந்தித்தேன். அதற்காக ஸ்டாலினையும் சந்திக்க வருகிறேன் என்று என்றைக்காவது சந்திரசேகர் ராவ் தெரிவித்தாரா?

அவர் தமிழகம் வந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று கும்பிட வந்தார். அப்படியே சென்னை வந்து ஸ்டாலினையும் கும்பிட்டுப் போக வந்தார். அதை ஏன் நீங்கள் மூன்றாவது அணிக்காக சந்திக்க வந்தார் என்று நினைக்கிறீர்கள்.

மீனாட்சி அம்மனுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை ஏன் ஸ்டாலின் சந்திப்புக்கு கொடுக்கிறீர்கள்?''

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பை காங்கிரஸார் சாதாரணமாகப் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close