[X] Close

சுற்றுச்சூழல் விதியையே திருத்தி மோடிக்கும் அனில் அகர்வாலுக்கும் முதல்வர் பழனிசாமி உதவியுள்ளார்: வேல்முருகன் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 15:33 pm
  • அ+ அ-

பேரழிவுத் திட்டங்களை தமிழ் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வேல்முருகன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் 139 சதுர கிலோ மீட்டர், புதுச்சேரியில் 2 சதுர கிலோ மீட்டர், டெல்டா மாவட்ட ஆழமற்ற கடல் பகுதியில் 1,654 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 116 எரிவாயுக் கிணறுகளை அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறது மோடியின் மத்திய பாஜக அரசு.

இதில் முதல் கட்டமாக, 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்து, அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறது.

கடந்த 9.10.2018 அன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து ஒரு மனு அளித்தார்; அந்த மனுவில் மொத்தம் 13 கோரிக்கைகள்;அதில் 10-வது கோரிக்கை, தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்ற மக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை, மத்திய சுற்றுச்சூழல் துறையே அனுமதி வழங்கிக் கொள்ளலாம் என்கிறது. அப்படியென்றால் தமிழக சுற்றுச்சூழல் விதியினையே திருத்தி, மோடிக்கும் அவர் நண்பர் ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வாலுக்கும் உதவியுள்ளார் பழனிசாமி.

நெடுவாசல், கதிராமங்கலம் என ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை மோடியும் பழனிசாமியும்.

ஆனால் ஃபாசிஸ்ட்டுகளின் இந்தப் பேரழிவுத் திட்டங்களை தமிழ் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து இதனைத் தடுத்து நிறுத்துவோம்", என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close