சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம் முதல் ‘நீட்’ மீது உச்ச நீதிமன்ற அதிருப்தி வரை | டாப் 10 விரைவு செய்திகள்


சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் உறுதி: சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக அருணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை மாநகர 110-வது காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.

“நான் சென்னையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் துணை ஆணையர், இணை ஆணையர் என சட்டம் ஒழுங்கிலும், போக்குவரத்து பிரிவிலும் பணிபுரிந்துள்ளேன். எனவே, சென்னை எனக்கு புதிது இல்லை. காவல் ஆணையர் பதவியை மற்றொரு முக்கிய பொறுப்பாக பார்க்கிறேன். ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, காவல் துறையில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது, கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன்” என்று புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண் கூறியுள்ளார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு: இபிஎஸ் விமர்சனம்: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படாது. காவல் துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படவில்லை” என்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அசாம் வெள்ளம்: இழப்பீடு வழங்க ராகுல் காந்தி வலியுறுத்தல்: அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புலேர்டலில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அசாம் வெள்ளப் பெருக்கில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 53,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர். "வெள்ளம் இல்லாத அசாம்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தையே இந்த எண்கள் பிரதிபலிக்கின்றன என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய குற்றவியல் சட்டங்கள்: குழு அமைத்த தமிழக அரசு: மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கவுள்ளது.

ரஷ்யாவில் பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை மாஸ்கோ சென்றடைந்தார். நுகோவோ–டூ விமான நிலையத்தில் ரஷ்யக் கூட்டமைப்பின் முதலாவது துணைப் பிரதமர் திரு டெனிஸ் மாந்துரோ, பிரதமர் மோடியை வரவேற்றார். அவருக்குப் பாரம்பரிய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது 22-வது இந்தியா – ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் மோடி இணைத் தலைவராக பங்கேற்பார். மாஸ்கோவில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுவார்.

விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பிரச்சாரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இத்தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேங்கைவயல் சம்பவம்: ஐகோர்ட் கேள்வி: வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என போலீஸாருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் விரைவில் தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்: குட்கா முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளில் அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை: உச்ச நீதிமன்றம்: இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது, "இது 23 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது. சமூக ஊடகங்கள் அல்லது மின்னணு தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம், கசிவு பரவலாக இருக்கும். அது காட்டுத்தீ போல் பரவியிருக்கும். இந்த தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை. இது தொடர்பாக தனது விசாரணை அறிக்கையை சிபிஐ அடுத்த விசாரணை தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், முறைகேடு நடந்த மையங்கள் எவை எவை என்பதை தேசிய தேர்வு முகமை அடையாளம் காண வேண்டும்.

நீட் தேர்வின் புனிதத்தன்மையை உறுதி செய்வதில் நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது. இதற்காக, புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்ட பல்துறைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பது அவசியமாகும். ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த முழு விவரங்களையும் அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். குழுவைத் தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது அமைப்பை மாற்ற வேண்டுமா என்பதை நீதிமன்றம் பின்னர் பரிசீலிக்கும். இளநிலை நீட் தேர்வை ரத்து செய்வது கடைசி முயற்சியாகவே இருக்கும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த கோரிக்கையை 10 பக்கங்களுக்கு மிகாமல் மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய தலைமை நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

4 வீரர்கள் வீரமரணம்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர்.