இளையான்குடியில் பேருந்தை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர்: போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு


இளையான்குடியில் தனியார் பேருந்தை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர், போலீஸார் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு.

இளையான்குடி: பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களை இயக்கக்கோரி இளையான்குடியில் ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென தனியார் பேருந்தை மறிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ரூ.3.74 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். புதிய பேருந்து நிலையத்தில் இன்னும் கடைகள் திறக்கப்பட வில்லை. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், நகரில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்துக்குச் செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர்.

இதையடுத்து பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி இன்று கண்மாய்கரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டச் செயலாளர் சதாம் ஹூசைன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அசாருதீன், பொருளாளர் நாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளையான்குடியில் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் திடீரென அவ்வழியாக வந்த தனியார் பேருந்தை மறிக்க முயன்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்ததால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.