[X] Close

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் படைப்பிரிவினர் ஒதுக்கீட்டில் பணியிலுள்ள வீரர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு: நடப்பு கல்வியாண்டிலேயே செயல்படுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:32 am
  • அ+ அ-

-கி.மகாராஜன்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் வரும் கல்வியாண்டிலிருந்து படைப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பணியிலுள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் வழங்கக்கோரி மாணவர் டி.குறளரசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘என் தந்தை ராணுவத்தில் பணிபுரிகிறார். நான் 2018-ல் நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டுக்கு விண்ணப்பித்தேன். பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில் சீட் ஒதுக்க உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:எம்பிபிஎஸ்/பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையில் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கான முன்னுரிமை வரிசைப் பட்டியலை மத்திய அரசு 30.11.2017-ல் வெளியிட்டது. அதில் படைப்பிரிவில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் விதவை மனைவி, வாரிசுகளுக்கு முதல் முன்னுரிமையும், ஊனமானவர்களின் வாரிசுகளுக்கு 2-வது முன்னுரிமையும் வழங்குவது உட்பட 9 முன்னுரிமை வரிசைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 8-வதாக பணியிலுள்ள வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனுதாரர் 8-வது முன்னுரிமை பட்டியலில் வருகிறார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் படிப்பில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் படைப்பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் 1.6.2018-ல்வெளியிட்ட அரசாணையில், மத்திய அரசின் பட்டியலில் இருந்த 9 முன்னுரிமை வரிசையில் 7 முதல் 9 வரையிலான முன்னுரிமை வரிசை நீக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வியில் படைப்பிரிவுகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் வாரிசுகளுக்கு சலுகைவழங்கிவிட்டு, பணியிலுள்ளவர்களின் வாரிசுகளுக்கு சலுகைமறுப்பது சரியல்ல. படைப்பிரிவினருக்கு வழங்கும் சலுகைதற்போது பணியில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

இதனால் தமிழக அரசின் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் படைவீரர்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கான முன்னுரிமை பட்டியலில் மத்திய அரசு பட்டியலில் இடம்பெற்றிருந்த 7 முதல் 9 வரையிலான முன்னுரிமை பட்டியல் நீக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் படிப்பில் படைப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அபிநந்தனை நினைவுகூர்ந்த நீதிபதி

உயர் படிப்புக்கான ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினருக்கும், பணியிலுள்ள ராணுவத்தினருக்கும் இடையே பாகுபாடு பார்ப்பது சரியல்ல எனத் தெரிவித்த நீதிபதி, விங் கமாண்டர் அபிநந்தனை நினைவுகூர்ந்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில், மக்களால் உண்மையான ஹீரோவாக பார்க்கப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த விங்க் கமாண்டர் அபிநந்தன். அவரது மகள், தமிழக மருத்துவக் கல்லூரியில் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டு பிரிவில் எம்பிபிஎஸ்சில் சேர நினைத்தால் இப்போதுள்ள அரசாணைப்படி முடியாது.

அதே நேரத்தில் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து திரும்பியதும் பதவி விலகியிருந்தால், அவர் முன்னாள் படைவீரராகியிருப்பார். அப்படி நடந்திருந்தால் அவர் மகளுக்கு இப்போது முன்னாள் படைவீரர் பிரிவில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருக்கும். இந்த பாகுபாட்டை ஏற்க முடியாது. பணியிலுள்ள படைவீரர்களின் பணியை அங்கீகரிக்க மறுக்கக்கூடாது என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close