[X] Close

கிடப்பில் உள்ள கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் புறநகர் மின்சார ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் விரைவில் நல்ல முடிவு வரும் என அதிகாரிகள் தகவல்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:24 am
  • அ+ அ-

சென்னை புறநகரில் தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் கிடப்பில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி மின்சார ரயில் திட்டப்பணியை துரிதப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சிப்காட், ஒரகடம், கூடுவாஞ்சேரி, இருங்காட்டுக்கோட்டை, தாம்பரம் போன்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன.

இதனால், நடுத்தர மக்கள் அதிக அளவில் வீடுகளை வாங்கி குடியேறி வருவதால், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதேபோல், ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து ஒரகடம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு பணியின் காரணமாகச் சென்று வருகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைந்து முடித்தால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், சாலைகள் விரிவாக்கம், பொது போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.

ஆவடி, ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கிமீ) புறநகர் மின்சார ரயில் திட்டம் 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் எவ்வித கட்டுமானப் பணியையும் தொடங்கவில்லை. இதனால், மேற்கண்ட பகுதிகளில் இருந்து மாநகரப் பேருந்துகளில் மணிக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

சில நேரங்களில் சீரான பேருந்து வசதி இல்லாததால், தனியார் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் போதிய அளவில் அரசுப் பேருந்துகள் செல்லாததால், தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு இந்த ரயில் திட்டத்தை விரைவுபடுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய ரயில் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை நீடிக்கிறது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம். மத்திய அரசை மட்டுமே நம்பியிருக்காமல், மாநில அரசுகளோடு இணைந்து ரயில்வே திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே திட்டங்களை உடனுக்குடன் முடிக்க முடியும். மேலும், மாநில அரசு விரும்பினால் புதிய ரயில் திட்டங்களை வாரியத்தின் ஒப்புதலோடு செயல்படுத்த முடியும்’’ என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close