[X] Close

பொதுத்தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம்: சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சி- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 16:47 pm
  • அ+ அ-

பொதுத்தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் என்ற பரிந்துரை எதிர்காலச் சமுதாயத்தை சவக் குழிக்கு அனுப்பும் முயற்சி என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''11 மற்றும் 12-ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் என்று தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

மொத்தப் பாடங்களின் எண்ணிக்கையை 6-ல் இருந்து 5 ஆகக் குறைப்பது எளிமையாக்குவதாக நினைத்து மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைக்கச்செய்யும் நடவடிக்கையாகும்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏதாவது ஒரு மொழியினை தேர்ந்தெடுக்கச் சொல்லும்போது ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தை ஒதுக்கித் தள்ளுவார்கள். ஏற்கனவே தமிழ்ப்பாடம்  கட்டாயம் என்று சட்டம் இயற்றியது என்னவாகும்?  தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைப் புறக்கணிப்பார்கள் இதனால் தொடர்புமொழியும் துண்டிக்கப்படும். இரு மொழிக்கொள்கை காற்றில் பறக்கும்.

வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கை

10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள்தான் என்று பரிந்துரைப்பதும் மொழியின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினைப் பிழையின்றி எழுதவும் படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும் .

பள்ளிக்கல்வித் துறையின் இந்தப் பரிந்துரைகள் எதிர்காலச் சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியாகும். எனவே தமிழக முதல்வர் இதை முழுமையாக நிராகரித்து மொழியின் வளர்ச்சியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close