திருவாரூர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்!


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியும், மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பி.ஆர் பாண்டியன் தலைமையிலான தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் குளங்கள், பண்ணை குட்டைகள் அமைத்து மண்ணை வெளியில் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். பருத்தி, எள் உள்ளிட்ட கோடை பயிர்கள் பாதிப்பை வெளிப்படையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரம் உயிர் காக்கும் மருத்துவப் பிரிவு மற்றும் மருத்துவர்கள் பணியில் இல்லாத நிலை உள்ளதால் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மட்டுமே அழைத்துச் செல்லும் நடைமுறையை கைவிட்டு, நோயின் தன்மைக்கு ஏற்ப உயிரை காக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்த வேண்டும், ஓஎன்ஜிசி பெரியகுடி எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அடைக்க முயற்சிக்காமல், ஓஎன்ஜிசிக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பி.ஆர் பாண்டியன் தலைமையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.