[X] Close

திருப்பரங்குன்றத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்: ஒரே நேரத்தில் குவிந்த தலைவர்கள்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:57 am
  • அ+ அ-

-என்.சன்னாசி

தமிழகத்தில் ஏற்கெனவே 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில், திருப்பரங் குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

 இத்தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக, அமமுகவுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதிகளில் முதல்வர், துணை முதல்வர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் திமுக, அமமுகவின் முக்கிய தலைவர்கள் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்தனர். வாக்குப்பதிவு தேதி நெருங்குவதால் 4 தொகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக தற்போது பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே சமயத்தில் திருப்பரங்குன்றத்தில் முக்கியத் தலைவர்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாக்குச் சேகரித்தனர். இவர்கள் நேற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்தனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் பல்வேறு இடங்களில் வாக்குச் சேகரித்தார்.

இதற்கிடையே அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் குவிந்ததால், பிரச்சாரக் கூட்டத்துக்கான இடம், நேரம் ஒதுக்கி தருவது, பாதுகாப்பு அளிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒருவர் பேசி முடித்துவிட்டுச் சென்ற பிறகே அந்த இடத்தில் பிற கட்சி தலைவர்கள் பேசும் சூழல் ஏற்பட்டது.

இடைத்தேர்தலுக்கான 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்போடு, ஆளும் கட்சியினர் சுறுசுறுப்பாகச் செயல்படுகின் றனர். அதே நேரத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் திமுகவும், அமமுகவும் வியூகம் வகுத்துச் செயல்படுகிறது. வாக்குப்பதிவு தேதி நெருங்க, நெருங்க திருப்பரங்குன்றம் உட்பட 4 தொகுதிகளிலும் தேர்தல் களம் மேலும் பரபரப்பாகும் நிலை காணப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close