[X] Close

விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியைக் கொலை செய்த கல்லூரி மாணவர் கைது


  • kamadenu
  • Posted: 09 May, 2019 17:16 pm
  • அ+ அ-

-க.ரமேஷ்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருத்தாசலம் அருகே உள்ள டி.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதிக்கு குடிவந்துள்ளார். இவரது மகள் திலகவதி(19). இவர் விருத்தாசலம் அருகே எருமனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலப் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். அவரது மனைவி கொளஞ்சி நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கல்லூரி முடிந்தவுடன் மாலை வீட்டுக்குச் சென்ற திலகவதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குச் சென்ற மர்ம நபர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். கத்தி குத்துப்பட்ட நிலையிலும், திலகவதி அதே பகுதியில் கார் ஓட்டுநராக உள்ள அவரது தாய்மாமா மகேந்திரனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மகேந்திரன் திலகவதி வீட்டுக்குச் சென்று பார்த்த போது கத்தி குத்துப்பட்டு திவகவதி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மகேந்திரன் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் திலகவதியின் செல்போனைக் கைப்பற்றி அதில் வந்துள்ள அழைப்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் (19) என்பவரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. போலீஸார் விசாரித்ததில் அவர் தான் இந்தக் கொலையை செய்தது உறுதி செய்யப்பட்டது.

நேற்று விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஆகாஷை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் திலகவதியைக் குத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ''இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். தற்பொழுது திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஆகாஷ் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் படித்து வந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களாக கிரிக்கெட் விளையாடச் சென்ற ஆகாஷ், திலகவதியிடம் செல்போனில் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலகவதி, ஆகாஷ் செல் நம்பரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திலகவதி வீட்டிற்கு ஆகாஷ் சென்றுள்ளார். அப்போழுது வீட்டில் தனியாக இருந்த திலகவதியிடம் ஆகாஷ் இது குறித்துக் கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஆகாஷ் கத்தியால் திலகவதியை வயிற்றில் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமைடந்த திலகவதி உயிரிழந்தார். நேற்று ஆகாஷைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close