[X] Close

புதுச்சேரி அரசு விவசாயப் பண்ணையில் கூடுதல் விளைச்சல்; பார்க்கும் இடமெல்லாம் பலா


  • kamadenu
  • Posted: 09 May, 2019 17:03 pm
  • அ+ அ-

-செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி அரசின் விவசாயப் பண்ணையில் 2 ஏக்கரில் விளைவிக்கப்படும் பலா மரங்களில் இவ்வாண்டு 20 சதவீதம் கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் பலாவைக் காண முடிகிறது.

புதுச்சேரியில் 1974-ம் ஆண்டு முதல் குருமாம்பேட் பகுதியில் காமராஜர் பெயரில் விவசாய அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளுக்குத் தேவையான விவசாயப் பயிற்சி, இயற்கை முறையிலான விவசாய சாகுபடி, புதிய விவசாயத் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்குள்ள அரசுப் பண்ணையில் தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா போன்றவை இயற்கை முறையில் பயிரிடப்பட்டு விளைவிக்கப்படுகின்றன.

இதில் இவ்வாண்டு வேர் பலா மற்றும் நாட்டுப் பலா நல்ல விளைச்சலைத் தந்துள்ளது.

Capture.PNG 

இதுதொடர்பாக இளநிலை விஞ்ஞானி நரசிம்மன் கூறுகையில், "கடந்த ஆண்டை விட 20% கூடுதல் வளர்ச்சியை அரசுப் பண்ணையில் பலா பெற்றுள்ளது. இங்கு 2 ஏக்கரில் உள்ள பலா மரங்கள் 35 ஆண்டுகளைத் தாண்டியும் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.

இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இயற்கை முறையில் பழங்கள் பழுக்கின்றன. இவை நல்ல ருசியாகவும் சத்துள்ளதாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பலாவைக் காண முடிகிறது. இயற்கையாக விளையும் பலா விற்பனையும் இங்கு செய்யப்படுகிறது. இந்த இயற்கை முறையிலான பலாப்பழங்களை வாங்கிச் செல்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close