[X] Close

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22-ல் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு  


22

  • kamadenu
  • Posted: 09 May, 2019 12:59 pm
  • அ+ அ-

-கி.மகாராஜன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2018 ஆகஸ்ட் 14-ல் சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சிபிஐ 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த காலக்கெடு 2018 டிசம்பர் 14-ல் முடிந்தது. காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு காவல் அதிகாரி மீது கூட சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நெருங்குகிறது. இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடைபெற்றன.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22-ல் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பர நகர் விவிடி சந்திப்பு அல்லது எஸ்விஏ பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் எதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ல் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ல் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், ''மே 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மே 22-ல் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தினால் பிரச்சினை வரும், இதனால் அன்றைய தினம் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. மேலும் அரசியல் ஆதாயத்திற்காக யாராவது வன்முறையைத் தூண்டவும் வாய்ப்புள்ளது'' என கூறப்பட்டது. 

அதற்கு மனுதாரர் தரப்பில், ''தனியார் ஹோட்டல் ஒன்றில் அமைதியான முறையிலேயே நடத்தப்பட தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நினைவஞ்சலிக் கூட்டத்தை மே 22 ஆம் தேதி பெல் ஹோட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த அனுமதி வழங்கினர். அதோடு, 250 பேர் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். நிகழ்வு முழுவதையும் மனுதாரர் மற்றும் காவல்துறை ஆகிய இரு தரப்பும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். நிகழ்வில் கலந்து கொள்வோரின் பட்டியலை நிகழ்வு முடிந்த பின்னர் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close