மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு அநீதி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


விழுப்புரம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இத்தொகுதியில் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேர், மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில் பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேர் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் மகளிர் உரிமைத் தொகை கொடுத்துவிட்டு, அதை சாதனைப் போன்று அமைச்சர் உதயநிதி கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகின்றனர். இதன்படி, சராசரியாக பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர், உரிமைத் தொகை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், மாநிலத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்றானதும், பின்தங்கிய மாவட்டமுமான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவதற்கு சரியான தருணம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தான்" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.