[X] Close

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீர் மின்தடை; உள்நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: ஊழியர்களுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதம்- விசாரணைக்கு உத்தரவு


5

  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:36 am
  • அ+ அ-

-ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் ஐசியூ வார்டில் வென்டிலேட்டர் செயல்படாமல் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மின்தடைக்கும், 5 நோயாளிகளின் உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனையின் டீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பல இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வயர்கள் அறுந்து விழுந்ததால், மதுரையில் நேற்று முன்தினம் இரவு 6.20 மணி முதல் 7.20 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால், மரங்களை அப்புறப்படுத்தி அறுந்து விழுந்த மின்வயர்களை மின் ஊழியர்களால் உடனடியாகச் சீரமைக்க முடியவில்லை.

இதில், 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப் படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் மின்தடை ஏற்பட்டது. மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசியச் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை கள் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உடனே ஜெனரேட்டர்கள் இயக்கப் படும்.

ஆனால், நேற்று முன்தினம் இரவு ஜெனரேட்டரும் பழுதடைந்த தால், மின்தடை ஏற்பட்டவுடன் அதனை இயக்க முடியவில்லை. அதனால், அரசு மருத்துவமனையே இருளில் மூழ்கியது.

ஐசியூ வார்டுகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வெண்டி லேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக தலைக்காய சிகிச்சைப் பிரிவு ஐசியூ வார்டில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கிய வென்டிலேட்டர் இயங்காததால், வார்டில் அந்த நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவர்களால் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை.

இதில் இந்த வார்டில் சிகிச்சை பெற்ற மதுரை பூஞ்சுத்தியைச் சேர்ந்த மணிமுத்து மனைவி மல்லிகா (59), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் (60), ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்தி ரன்(52) ஆகியோர் மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறப்படுகிறது. அதை யும் வார்டில் பணிபுரிந்த செவிலி யர்கள், ஊழியர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே கண்டுபிடித்துள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில், வேறு சில வார்டுகளில் சிகிச்சை பெற்றுவந்த மதுரை மீனாம்பாள்புரம் பால்ராஜ் மனைவி செல்லத்தாய் (55), உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் (54) ஆகியோரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

5 பேரும் வென்டிலேட்டர் இயங்காமல் ஆக்ஸிஜன் தடைபட்டு உயிருக்குப் போராடி இறந்து விட்டதாக, அவர்களின் உறவினர்கள், மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், 5 பேர் இறந்த சம்பவம் குறித்து ‘டீன்’ வனிதாவிடம் விசாரித் தார். அவர் மின்தடை தடை ஏற் பட்ட நேரத்தில் நடந்த விவரங் களை அறிக்கையாகத் தயார் செய்து சுகாதாரத் துறை செயல ருக்கு அனுப்பி உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து துறை ரீதி யான விசாரணைக்கு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தர விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பழுதான மருத்துவ உபகரணங்கள்

மருத்துவர்கள் சிலர் கூறிய தாவது: 12 மணி நேரம் மின்சார பேக்-அப் பேட்டரியுடன் இயங்கக் கூடிய வென்டிலேட்டர்கள் உள்ளன. ஆனால், மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள வென்டிலேட்டர்களே உள்ளன. அதனால் மின்தடை ஏற்பட்டால் அரை மணி நேரம் கூட அந்த வென்டிலேட்டர்கள் இயங்க முடியாத நிலையில்தான் உள்ளன.

ஜெனரேட்டர் பழுதாகி சில நாட்களாகிவிட்டன. அதனை சரி செய்யச் சொல்லிவிட்டோம். மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் அனைத்தும் நல்ல நிலையில் இயங்கக் கூடி யவை அல்ல. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற னர்.

ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறக்கவில்லை: டீன் விளக்கம்

மருத்துவமனை டீன் வனிதாவிடம் கேட்டபோது, ‘‘மின்சாரம் இல்லாவிட்டாலும் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் பேட்டரிகள் மூலம் வென்டிலேட்டர்கள் இயங்கும். மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஜெனரேட்டர் ஏற்கெனவே பழுதாகி இருக்கவில்லை. மின்தடை ஏற்பட்டபோது அதனை இயக்கும்போது அது டிரிப்பாகி பழுதடைந்துவிட்டது. அந்த நேரத்தில், இந்த நோயாளிகள் இறந்ததும் உண்மைதான். ஆனால், அவர்கள் இறப்புக்கும், மின்தடைக்கும், வென்டிலேட்டர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், எப்போது வேண்டுமானாலும் இறக்கும் நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். நோயின் தன்மையாலேயே அவர்கள் இறந்தனர். பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து இறக்கும் தருவாயில் ஆபத்தான நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 20 பேர் முதல் 35 பேர் வரை இறப்பது சாதாரண நிகழ்வாகும். இந்த நோயாளிகள் இறந்த நேற்று முன்தினம் கூட 33 பேர் இறந்துள்ளனர். அதில் இந்த 5 பேரும் அடங்குவர் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close