[X] Close

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரை குடிநீராக்குவதே நிரந்தர தீர்வு: சிங்கப்பூர் போல கழிவுநீரை சுத்திகரிக்கவும் நிபுணர்கள் ஆலோசனை


  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:14 am
  • அ+ அ-

-டி.செல்வகுமார்

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்தான் நிரந்தர தீர்வாக இருக்கும். சிங்கப்பூர் போல கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னையின் தினசரி குடிநீர்தேவை 1,200 மில்லியன் லிட்டர்.

தற்போது 550 மில்லியன் லிட்டர்விநியோகிக்கப்படுகிறது. ஏரிகளில் இருந்து 110 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 180, வீராணம் ஏரியில் இருந்து 180, விவசாயக் கிணறுகளில் இருந்து 15, குடிநீர்வாரிய ஆழ்குழாய் கிணறுகளில்இருந்து 35, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 30 மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 550மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டுவிட்டன. ஏரிகளில் தற்போது 251 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஜூன் 1 முதல் 550 மில்லியன் லிட்டர் 500 மில்லியன் லிட்டராகக் குறைத்து விநியோகிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரிய உயர் அதிகாரி கூறியதாவது: தற்போது சென்னைக் குடிநீர் தேவையை பெருமளவு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. நெம்மேலியில் தினமும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய நிலையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெம்மேலி அருகே உள்ள பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட நிலையமும் அமைக்கப்பட உள்ளது என்றார்.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:

கடல்நீரைக் குடிநீராக்குவதற்கு செலவு அதிகமாகிறது. ஆயிரம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய ரூ.50 செலவாகிறது. ஆனால் மக்களிடம் இருந்து சராசரியாக ரூ.5 மட்டும்வசூலிக்கப்படுகிறது. எனவே குறைந்த விலையில் கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான ஆய்வுஉலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஐஐடி-யும் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

கடல்வாழ் உயிரினங்கள், பறவைகளின் உணவுக் குழாயில் சவ்வு (Graphene) இருப்பதால் அவை கடல்நீரைக் குடிக்கும்போது நல்ல தண்ணீர் அதன் உடலுக்குள் செல்கிறது. உப்புநீரை வாய்வழியே வெளியேற்றிவிடுகின்றன. அந்த சவ்வில் உள்ள ரசாயனத் தன்மைபற்றிதான் ஆய்வு நடைபெற்று வருகிறது. லண்டன் இந்த ஆய்வில் முன்னோடியாக உள்ளது. இந்த ஆய்வு வெற்றிபெற்றால் ஆயிரம் லிட்டருக்கான செலவு 10 ரூபாயாக இருக்கும். இத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் செயல்படுத்தலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீரியல் வல்லுநர் கூறும்போது, “சிங்கப்பூரில் கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து “நியூ வாட்டர்” என்ற பெயரில் வழங்குகின்றனர். அதுபோல தமிழகத்திலும் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த முதலில் மக்களைத் தயார்படுத்த வேண்டும். பின்னர், கழிவுநீரை நவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து வழங்கலாம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close