[X] Close

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும்: அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி


3

  • kamadenu
  • Posted: 08 May, 2019 07:40 am
  • அ+ அ-

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ள 25,000 பேருக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தளவாபாளையத்தில் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து திறந்த வேனில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

அரவக்குறிச்சி தொகுதி கடந்த ஓராண்டுக்கும் மேல் மக்கள் பிரதிநிதியின்றி அநாதையாக உள்ளது. லஞ்சம், ஊழலுடன், மக்களைப் பற்றி கவலைப்படாத பழனிசாமியின் ஆட்சியை அகற்ற 18 எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். இதனால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. அவர்களின் பதவியைப் பறித்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்ற நீங்கள் ஆதரவு தரவேண்டும். இந்த ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது எனப் பலரும் நினைப்பீர்கள். தற்போது மைனாரிட்டி அரசுதான் நடந்து கொண்டுள்ளது. திமுக கூட்டணியில் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால் சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 119 ஆக உயர்ந்துவிடும். மே 23-ம் தேதிக்குப் பிறகு நாம்தான். மேலும் அன்று ராகுல் காந்தி பிரதமராகிவிடுவார்.

ஆட்சி பறிபோவதை தடுக்க 3 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க சதித் திட்டம் தீட்டினர். அவர்களது சதியை முறியடிக்கவே பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தோம். இதுவரை மோடி இந்த ஆட்சியை காப்பாற்றினார்.

அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25,000 பேருக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். தடுப்பணை, அரசுக் கல்லூரி, கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள் நாம். மோடியைப் போல ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் என பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம். சொன்னதைச் செய்வோம், செய்வதையே சொல்வோம் என்றார்.

தொடர்ந்து புகழூர் நால்ரோடு, ஆலமரத்துமேடு, புன்னம்சத்திரம், ஆரியூர், நஞ்சை காளக்குறிச்சி, ராஜபுரம் ஆகிய இடங்களில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close