[X] Close

தமிழிசைக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்குகிறது; விவாதம் செய்ய விரும்பவில்லை: கமல் பேட்டி


  • kamadenu
  • Posted: 07 May, 2019 14:03 pm
  • அ+ அ-

தமிழிசை எதையாவது பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கி வருகிறது. ஆகவே, விவாதம் செய்ய விரும்பவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி:

தேர்தல் பிரச்சாரம் எப்படி இருந்தது?

பல்வேறு இடைஞ்சல்கள் இருந்தாலும் மக்கள் சாரை சாரையாக வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது சிறப்பான ஒன்று

3 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்குத் தடை விதித்துள்ளதே?

நான் ஏற்கெனவே சொன்னபடி அவர்கள் வேலையை (உச்ச நீதிமன்றம்) அவர்கள் செய்கிறார்கள். இவர்கள் வேலையை இவர்கள் செய்கிறார்கள். இதையும் இன்னொரு விளையாட்டாகத்தான் நான் பார்க்கிறேன். அதில் இரண்டு பேர் வழக்கு போடுவதும் ஒருவர் போடாமல் இருப்பதும் விளையாட்டின் ஒரு பகுதிதான்.

தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் டெல்லி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளாரே?

அவர் சொன்னவிதம் வேறு என்று நினைக்கிறேன். அவர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் இந்தக் கருத்தைக் கூறியிருப்பார். தேசிய ஒருமைப்பாட்டை விரும்பும் யாரும் அப்படி பேசியிருக்க மாட்டார்கள். மற்றபடி அவ்வாறு அவர் பேசியிருந்தால் அது தவறுதான்.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் குடிநீர் வறட்சி உள்ளதே?

தண்ணீர்  பிரச்சினையில் முன்னேற்பாடு செய்திருந்தால் இதைத் தவிர்த்திருக்க முடியும் என்பதுதான் பல அறிஞர்களின் கருத்து. என் கருத்து என்று சொன்னால் அரசியல் என்பார்கள். இதைத் தவிர்க்கும் முன்னேற்பாடு செய்திருந்தால் வராமல் தடுத்திருக்கலாம் என்பது நீர்நிலை ஆய்வாளர்களின் கருத்து.

ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததை கமலுக்குப் பாராட்ட மனமில்லை. டார்ச் லைட் இருந்தாலும் அவருக்குப் பார்வைக் கோளாறு என தமிழிசை பேசியுள்ளாரே?

அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது அவருடன் விவாதம் செய்யும் நேரமில்லை.

இவ்வாறு கமல் பதிலளித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close