மத்திய அரசு பணியாளர் தேர்வு : ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்களுக்கும் அனுமதி மறுப்பு... தேர்வர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!


மதுரை: ஒரு நிமிடம் தாமதமாதமாக வந்த தேர்வர்களை கூட தேர்வு மையத்திற்குள் காவல்துறையினர் அனுமதிக்காததால், அதிருப்தியடைந்த அவர்கள், தேர்வு மையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலியில் மத்திய அரசின் இஎஸ்ஐசி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த இஎஸ்ஐஇ மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று தமிழகம் முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டன. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி, மதுரை போன்ற தென்மாவட்டங்களுக்கான ஒரே தேர்வு மையமாக மதுரை இருந்தது. மதுரையில் எஸ்இவி பள்ளி, யாதவா கல்லூரி, மீனாட்சி கல்லூரி உள்பட 12 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

கடைசியாக இந்த மருத்துமனைகளுக்கான பணியாளர் தேர்வு, கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு தற்போதுதான் இந்ததேர்வு நடப்பதால் தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து இந்த தேர்வு எழுத இன்று மதுரையில் திரண்டனர். பல தேர்வர்கள், நேற்றே, மதுரைக்கு வந்து தங்கியிருந்து இன்று தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். பொருளாதார வசதியில்லாத பலர், கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பல பெண்கள், நேற்று பஸ்கள், ரயில்களில் மதுரைக்கு இன்று மதியம் நடந்த இந்த தேர்வில் பங்கேற்க வந்தனர்.

தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. 1.30 மணிக்கு தேர்வர்கள், தேர்வு மையம் நடக்கும் வளாத்திற்குள் வந்து விட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. ஆனால், நத்தம் சாலையில் உள்ள எஸ்இவி மையத்தில் 30க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 1.31 முதல் 1.35 வரை வந்துள்ளனர். அவர்களை தேர்வு மையம் அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. 1.31க்கு வந்தவர்களை கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், தேர்வர்கள், அவர்களது குடும்பத்தினர் தேர்வு மையத்தை முற்றுகையிட்டு காவல்தறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்வர்கள் கூறுகையில், ''கைக்குழந்தைகளுடனும், பல்வேறு உடல் உபாதைகளுடன் வந்திருந்த பலர், ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்திருக்கலாம். ஆனால், தேர்வு 2 மணிக்குதான் தொடங்குவதால் அவர்களை தேர்வு மையம் அதிகாரிகள் அனுமதித்து இருக்கலாம். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற எய்ம்ஸ், இஎஸ்ஐஇ மருத்துவமனைகள் தேர்வுகளுக்கு சென்று தேர்வு எழுதியிருக்கிறோம். ஆனால், தேர்வு தொடங்கும் 2 மணிக்கு முன் கால் மணி நேரத்திற்கு முன் வரை(1.45 மணி வரை) மனிதாபிமான அடிப்படையில் அனுமதிப்பார்கள்.

ஆனால், தமிழத்தில் மட்டும் நடத்தப்படும் இதுபோன்ற மத்திய அரசு தேர்வுகள் சிறிதும் மனிதாபிமானமின்றி நடத்தப்படுகிறது. பலர், அவசரம் அவசரமாக வந்து குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். ஆனால், 1.31 மணிக்கு வந்தவரை கூட மனிதாபிமானமே இல்லாமல் வெளியே அனுப்பினர். மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் உதவ முன்வரவில்லை'' என்றனர்.

இதுகுறித்து தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கூறுகையல், ''எங்களுக்கு 1.30 மணி வரை தான் அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு நிமிடம் தாமதமானால் கூட விடக்கூடாது என்று சொல்லும் போது நாங்கள் என்ன செய்ய முடியும்'' என்றனர்.