வாக்களித்த மக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த திமுக!


ஆட்சிக்கு வந்து 14 மாதங்களிலேயே மின்கட்டண உயர்வை அறிவித்து அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது திமுக அரசு. “இதனால், ரூ.55 முதல் ரூ.1130 வரை மின் கட்டணம் உயரும். ஆனால், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும்” என்று சொல்லி இருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக விட்டுக் கொடுக்கலாம்” என்று கூறியுள்ளா். இதனால், 100 யூனிட் இலவச மின்சாரத்திலும் கைவைத்துவிடுவார்களோ என்று எளிய மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கட்டண உயர்வுக்கு கூறப்படும் காரணம்

தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. அதை சரி செய்வதற்காகவும், மத்திய அரசின் நிர்பந்தத்தாலுமே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுத்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். இதுகுறித்து அவர் தந்திருக்கும் விளக்கத்தில், ” கடந்த 2011-12-ல் ரூ.18,954 கோடியாக இருந்த மின் வாரிய நிதியிழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2021 மார்ச் 31 வரை ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

2021-22-லிருந்து மின் வாரிய நிதியிழப்பை 100 சதவீதம் முழுமையாக மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக அரசு தற்போது உறுதியளித்ததைப்போல, கடந்த காலங்களில் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. இதனால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டது. இதனால் 2011-12-ல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகத்துக்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன், தற்போது 3 மடங்கு அதிகரித்து, ரூ.1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மின் விநியோகக் கடன்களை 75 சதவீதம் எடுத்துக்கொண்டு, அதன்மூலம் அசல் மற்றும் வட்டியைக் குறைத்து, நிதி நிலையைச் சீராக்குவதே மத்திய அரசு செயல்படுத்திய உதய் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால், இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சாரத் துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. எனவே, 8 வருட இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அனைத்தும் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இதன் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் தலையில் இடியாய் ஜிஎஸ்டி வரியும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு கடைபிடிக்கும் தாராளமய பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி விஷம் போல் ஏறி வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் மின்கட்டண உயர்வையும் அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு.


கடன் வலை


இதுகுறித்து மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, " தமிழக மின்வாரியம் எளிதில் மீள முடியாத அளவுக்கு கடன் வலையில் சிக்கியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் வருடாந்திர இழப்புகள் அதிகரிப்பதால், அவற்றை ஈடுகட்ட கடன் வாங்கப்படுகிறது. இதுவரை வாங்கி வைத்திருக்கும் கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு 16,511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், மின்வாரியங்களின் நிதி நெருக்கடியை சீர்செய்ய தொடங்கப்பட்ட உதய் திட்டத்தின் மூலம் மின் வாரியங்களின் கடனில் 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இதை ஏற்காமல் அதிகவட்டி செலுத்தக்கூடிய கடனில் 75 சதவீதமான 22 ஆயிரத்து 815 கோடியை மட்டும் ஏற்றது. அதில் மீதமுள்ள 7,605 கோடி கடனை மின்வாரிய கடன் பாத்திரங்களின் மூலம் திரட்டும் நிதியிலிருந்து அடைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை கடன் பத்திரங்களை வெளியிடாத காரணத்தால் அதிக அளவு வட்டி செலுத்தக்கூடிய கடன் சுமைகள் ஏறி வருகிறது. இதனால் இதுவரை 1,200 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக வட்டி கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, ஊரக மின் வசதிக் கழகம் மூலமும், மின்சார நிதிக் கழகம் மூலமும் மின்வாரியம் கடன் பெற்று வருகிறது. இவற்றிடமிருந்து நிதிபெற வேண்டுமானால் ஆண்டுதோறும் மின் கட்டணத்தைத் திருத்தம் (உயர்த்த) செய்ய வேண்டுமென நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதே போல மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு வழங்கப்படும் 10,793 கோடி ரூபாய் மானியத்தைப் பெறவும் ஆண்டு தோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். கடன் கொடுக்கும் வங்கிகளின் கடும் நெருக்கடியும் உள்ளது. இதையெல்லாம் சமாளிக்கவே இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு செய்துள்ளது" என்று சொல்கிறார்கள்.

காந்தி

மின்துறையில் ஊழல்


இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத் தலைவர் எஸ்.காந்தி, "மின்வாரியத்துக்கு இவ்வளவு கடன் எப்படி வந்தது என்றோ, அவற்றை அடைப்பதற்கான வழிகளையோ அமைச்சர் செந்தில் பாலாஜி பேச மறுக்கிறார். அரசியல்வாதிகளுடன் சேர்ந்து மின்வாரிய உயர் அதிகாரிகள் செய்த ஊழல் தான் இவ்வளவு பெரிய கடன் வலையில் தமிழ்நாடு மின்வாரியம் சிக்கக் காரணம். சூரிய ஒளி மின்சாரம் ஒரு யூனிட் மூன்று ரூபாய்க்கு கிடைத்தபோது சில வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ. 7.01 விலைக்கு அதை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. சந்தையில் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து 25 ஆண்டுகளுக்குக் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டது ஏன் என்பதையும் அமைச்சர் விளக்க வேண்டும்" என்றார்.

தங்கமணி

அவருக்கும் பொறுப்பு இருக்கிறது

இது குறித்து தமிழக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, "அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம். தமிழக மின் வாரியத்தின் மொத்தக் கடனானது 1,59,823 கோடி ரூபாய் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். 2006-ம் ஆண்டு நாங்கள் ஆட்சியைவிட்டு இறங்கும் போது, மின்வாரியத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தாலும் 10 ஆயிரம் மெகாவாட் மிகுதிறன் இருந்தது. ஆனால், 2011-ல் திமுக ஆட்சியை விட்டுப் போகும் போது 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்திருந்தார்கள். அவர்கள் ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம்கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை. பிறகெப்படி கூடுதலாக 34 ஆயிரம் கோடி கடன் வந்தது?

திமுக ஆட்சியில் கடும் மின் வெட்டு இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றினோம். 15 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரித்திருக்கிறோம். திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட் மேட்டூர் அனல் மின்நிலையத் திட்டம் எங்கள் ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது சொல்கிறார். அப்போது அவரும் தான் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். அவருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. இன்று கட்சி மாறிவிட்டோம் என்பதற்காக அவர் இப்படி பேசக்கூடாது. இலவச மின்சாரத்திற்கான 13 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை மின்வாரியத்திற்கு தருவதாக திமுக அரசு சொன்னது பட்ஜெட் புத்தகத்தில் உள்ளது. ஆனால், அதை ஏன் திமுக அரசு தரவில்லை. அப்படி தந்திருந்தால் இந்த மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே" என்றார்.

அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போது திமுக தலைவர் ஸ்டாலின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கண்டித்தார். இப்போது, அவரது அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது அதிமுக. இந்த போராட்ட அரசியலைத் தாண்டி எப்படியாவது மின் கட்டண உயர்வை வாபஸ் ஆகாதா என்பதே தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது!

x