[X] Close

ஃபானி புயலின் நகர்வை கண்காணிப்பதில் உதவியதால் இஸ்ரோ செயற்கைக்கோள்கள் மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன: இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் தகவல்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 07:03 am
  • அ+ அ-

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், அதிதீவிர புயலாக மாறிய நிலையில் அதன் நகர்வை கண்காணிப்பதில் இஸ்ரோ செயற்கைக் கோள்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

கடற்பரப்பில் உருவாகும் காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, அவை புயலாக வலுப்பெறுவது, கரையை கடப்பது உள்ளிட்டவற்றை கண்காணித்தல், கணித்தல் போன்ற பணிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது. அதற்கு இஸ்ரோ செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ரேடார் தரவுகள் உதவிபுரிகின்றன.

வங்கக் கடலில் ஃபானி புயல் உருவானதில் இருந்து, அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்தது வரை, அதன் நகர்வை கண்காணிக்கவும் கணிக்கவும், இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் உதவி புரிந்துள்ளன.

இப்பணியில் இஸ்ரோவின் இன்சாட்- 3டி, இன்சாட்-3ஆர்டி, ஸ்காட்சாட்-1, ஓசன்சாட்-2, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தொழில்நுட்பத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட மெகா ட்ராபிக்யூ ஆகிய 5 செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அவை, ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றதில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒருமுறை படங்களை எடுத்து இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு அனுப்பி வந்தன. அதன் மூலம் புயலின் வலு, நிலைகொண்டிருக்கும் இடம், புயலை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை வானிலை ஆய்வு மையம் கணிக்க முடிந்தது. மேலும் புயலின் கண் பகுதியில் இருந்து சுமார் 1,000 கி.மீ. ஆரம் அளவுக்கு மேகங்கள் சூழ்ந்திருந்ததையும், அதில் சுமார் 100 முதல் 200 கி.மீ. ஆரம் வரை மழை தரும் மேகங்கள் சூழ்ந்திருந்ததையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

புயல் கண்காணிப்பில் செயற்கைக்கோள் உதவியது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கே.ஜே.ரமேஷ் கூறும்போது, ‘‘வானிலை முன்னறிவிப்பு வழங்குவதில் செயற்கைக்கோள்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, புயல்கள் உருவாகும் நேரங்களில், அவற்றின் நகர்வை அறிந்துகொள்ள பேருதவியாக உள்ளன. ஃபானி புயலின் நகர்வை சரியாக கணித்து, அது கரையை கடக்கும் இடத்தை மிகச்சரியாக கூற முடிந்ததற்கு செயற்கைக்கோள்கள் உதவியாக இருந்தன. அதன் மூலம் லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு, உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close