[X] Close

செஞ்சி அருகே 4 ஆண்டுகளுக்குப் பிறகு  அதே நாளில் சிறுத்தை புலி நடமாட்டம்: மக்கள் பீதி 


senji-cheetah-alert

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 23 May, 2018 11:18 am
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இல்லோடு கிராமத்தில் சேகரின் ஆட்டுபட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை கடந்த 10-ம் தேதி இரவு மர்ம விலங்கு கடித்துக் கொன்றதாக செய்தி பரவியது. தொடர்ந்து மேலும் சில ஆட்டுக் குட்டிகள் காணாமல் போயின

தகவல் அறிந்த வனச் சரகர் பாபு தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விலங்கின் காலடித்தடத்தை சேகரித்து சென்னை வண்டலூரில் உள்ள வன விலங்குகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தனர். அதில் வன விலங்கு நடமாட்டம் எதுவும் பதிவாக வில்லை. கால்நடைகள் மீதும் தாக்குதலும் இல்லை. தொடர்ந்து கடந்த 18-ம் தேதியுடன் வனத்துறையினர் முகாமை காலி செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் 

இந்நிலையில் 20-ம் தேதி காலை 10 மணிக்கு, இல்லோடு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆடுகள் அலறியடித்து ஓடி வந்தன. சிறுத்தை ஒன்று, பாறை களுக்கு இடையே ஓடிச் சென்று பதுங்கியதை, ராமலிங்கம் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் ஆடுகளுடன் வீடு திரும்பினார். 

இத்தகவல் அறிந்த வனத் துறையினர் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தினர். பின்னர் இல்லோடு, கீழ்தாங்கல் பகுதியில் 4 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

இதன் பிறகு, பொது மக்கள் மலைப் பகுதிக்கும், மலையை ஒட்டிய விவசாய நிலங்களுக்கும் தனியாக செல்ல வேண்டாம்; கால்நடைகளை பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்; வன விலங்கு நடமாட்டம் தெரிந்தால் உடனே வனத்துறைக்கு தெரிவிக்க வேணடும் என கிராம மக்களிடம் வனத்துறையினர் கூறி வருகின்றனர். 

சிறுத்தை நடமாட்டத்தால் இல்லோடு, கீழ்தாங்கல், அன்னமங்கலம் என செஞ்சியைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் கடந்த சில நாட்களாக ஒருவித பீதி பரவியிருக்கிறது. 

 இந்தப் பகுதியை நன்கு அறிந்தவரான அன்னமங்கலம் தலைமை ஆசிரியர் முனுசாமியிடம் இதுபற்றி கேட்டபோது, “அன்னமங்கலம் கிராமத்தையொட்டிய மலைக்கு ‘செங்கோட்டு மலை’ என்று பெயர். இந்த மலை உச்சியில் சோழர்கள் படையெடுப்பின்போது வந்து தங்கி சென்றதாக சொல்லப்படுகிறது. 

இம்மலையில் சிறுத்தைகள் இருப்பது உண்மைதான். அந்த காலத்தில் இரவு நேரங்களில் அது மலையை ஒட்டி இறங்கும். அப்போது அங்குள்ள வீட்டு விலங்குகளை கொன்று சாப்பிடும். 

சிறுத்தையைப் பிடிக்க பொறி

அந்த காலத்திலேயே இங்கு சிறுத்தைப் பொறியை முன்னோர்கள் வைத்துள்ளனர். எங்கள் ஊரைப் போல சாத்தனந்தல், சோழங்குணம், கீழ்தாங்கல். சித்தேரி, பென்னகர், மேல் எடையாளம் சமத்தகுப்பம் கிராமங்களில் இந்தப் பொறிகள் உண்டு. சிறுத்தை புலியை பிடிக்க பாறைகளுக்கு இடையே உள்ள பொந்தில் ஒரு ஆட்டுக்குட்டியை கட்டி வைப்பார்கள். ஆட்டுக்குட்டியின் கத்தலை கேட்டு பொந்துக்குள் சிறுத்தை நுழைந்தவுடன் மர பலகை மூடிக்கொள்ளும். ஆட்டுக்குட்டி வெளியே வர, கதவு தானாக திறக்கும் அளவுக்கு இந்த சிறுத்தை பொறியை அந்த காலத்திலேயே வடிவமைத்துள்ளனர். 

 முஸ்கோந்தி எனப்படும் மலை குரங்குகள் இப்பகுதியில் உண்டு. இவை மலைகளில் மட்டுமே வாழும். அது குடியிருப்பு பகுதிகளுக்கு வராது. 

கடந்த சில நாட்களாக இரவில் இந்த மலை குரங்குகள் மலையில் தங்காமல் கீழே குடியிருப்பு பகுதிக்கு வந்து தங்கி காலையில் மலைக்குச் செல்கின்றன. சிறுத்தையின் நடமாட்டத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டு, முஸ்கோந்தியின் நடவடிக்கைகளிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் என்று இப்பகுதியினர் அஞ்சுகின்றனர். 

இதுவரை கன்று குட்டிகள், ஆடுகள், நாய்குட்டிகள் என ருசி பார்த்த சிறுத்தை ஒருமுறை மனிதனை சாப்பிட்டு விட்டால், அந்த ருசி அதற்கு பிடித்து விட்டால் என்னாகும் என்ற பயம் இப்பகுதி கிராம மக்களிடம் உள்ளது.

விரைவில் இதை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

2014ம் ஆண்டு மே 10-ம் தேதி இப்பகுதியில் சிறுத்தை ஒன்று வந்தது. சரியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் சிறுத்தை வந்தது வியப்பை அளிக்கிறது என்றார். 

காடுகளுக்குள் செல்ல வேண்டாம்

வனத்துறையினரிடம் இதுபற்றி கேட்டபோது, மலைகளில் உள்ள விலங்குகள் கோடை காலத்தில் மக்கள் குடியிருப்புகளை தேடி வருவது இயல்பான ஒன்று. சிறுத்தை புலிகள் நீங்கள் குறிப்பிடும் மலையில் காலங்காலமாக உள்ளது. 

1960 களில் சிறுத்தை புலியை பொறிவைத்து பிடிக்கும் அப்பகுதி மக்கள், மாடு விரட்டு போல பொங்கல் நாளில் சிறுத்தை புலியை விரட்டுவார்கள். சிறுத்தை புலிகள் 10 கிலோ எடைக்கும் குறைவான விலங்குகளையே கொல்லும். அப்படி வனத் துறையினரால் பிடிக்கப்படும் சிறுத்தைகள் நீண்ட தூரம் தள்ளி உள்ள அடர்ந்த காடுகளில் விடப்படும். இல்லையெனில் தனது கழிவுகளின் வாசத்தை மோப்பம் பிடித்து பழைய இடத்திற்கே வந்து விடும் . 

வளமான காடுகளில்தான் வன விலங்குகள் வாழும். அவை தனது தேவையைத் தாண்டி யாரையும், எதையும் தாக்காது. 

காடுகளை அழித்து விவசாய நிலமாக்கி விட்டால் சிறுத்தை என்ன செய்யும்? அது தனது எல்லை வரை வருகிறது. காடுகளில் தனக்கு தேவையான முயல். 

மான் போன்றவைகளை அடித்து சாப்பிடுகிறது. அக்கிராம மக்கள் காடுகளுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆடுகளை காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. 

வன விலங்குகளின் இடத்தை நாம் ஆக்கிரமிக்க ஆரம்பித்ததால்தான் அது குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. காடுகளுக்குள் மனிதர்கள் செல்லாமல் இருந்தால், அதற்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் அது மனிதனுக்கு தொந்தரவு அளிக்காது. எனவே இப்போதைக்கு சிறுத்தை புலிகளை பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்தனர். 

 சிறுத்தையை கொன்றவருக்கு அரசின் வெகுமதி 

 கடந்த 28-12-1953-ல் அன்ன மங்கலம் கிராமத்தில் உள்ள கம்பங்காட்டில் சிறுத்தை ஒன்று நுழைந்ததை அறிந்த கிராம மக்கள், அதைப் பார்ப்பதற்காக பாதுகாப்பாக அருகில் இருந்த மரங்களில் ஏறி, கிளைகளில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தனர். இத்தகவல் அறிந்த அக்கம்பக்கம் கிராம மக்கள் குடும்பத்துடன் வண்டி கட்டிக் கொண்டு அன்னமங்கலத்தில் குவிந்தனர்.

 பென்னகர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரும் சிறுத்தையை பார்க்க வந்துள்ளார். அவர் ஏறி அமர்ந்த வேப்ப மரக்கிளை முறிந்து விழுந்ததில் கடும் பசியில் இருந்த சிறுத்தை முனுசாமியின் கழுத்தை கவ்வ வந்தது. உடனே முனுசாமி சம யோசிதமாக தான் கட்டியிருந்த தலைப் பாகையை சிறுத்தையின் வாயில் திணித்தார், ஆனாலும் முனுசாமியை சிறுத்தை விடவில்லை. 

அங்கு விலங்குக்கும் மனிதனுக்கு உயிர் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மேலும் சிலரைக் கண்டு உறுமியது. இதைக் கண்ட சோழங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் முனுசாமியை காப்பாற்ற சிறுத்தையை சுட்டு வீழ்த்தினார். இதில் படுகாயமடைந்த முனுசாமி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு உயிரிழந்தார். 

ராஜுவின் வீரச் செயலை அறிந்த தமிழக அரசு 30-12-1954ம் தேதி சிறுத்தையை கொன்றதற்காக 20 ரூபாயை அவருக்கு வெகுமதியாக அளித்தது. இப்போது சிறுத்தை நடமாட்டம் வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக செஞ்சி வட்டார கிராமங்களில் இந்த பழைய கதை நினைவு கூறப்பட்டு பேசப்பட்டு வருகிறது. 


சிறுத்தையை கொன்றதற்காக 1954-ல் தமிழக அரசால் வழங்கப்பட்ட வெகுமதிச் சான்று.

- எஸ்.நீலவண்ணன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close