[X] Close

உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த இயலாது: வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 16:05 pm
  • அ+ அ-

தமிழக உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த இயலாது என வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பைக் காரணம் காட்டி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டியது. ஆனால் திமுக தொடர்ந்த வழக்கால் அது தள்ளிப்போனது. தொகுதி மறுசீரமைப்பு, மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வார்டு வரையறை போன்ற கோரிக்கைகளுடன் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை செய்வதற்கு தமிழக தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப கால அவகாசம் கேட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடப்பது தள்ளிப்போனது. சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் மூலமே ஆட்சிப்பணி நடக்கிறது.

இந்நிலையில் வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ''தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும். 6 மாத காலத்திற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படக்கூடாது என்ற விதியை மீறுவதாக உள்ளது.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்கவேண்டிய அடிப்படைப் பணிகள் நடக்காமல் உள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் நிறைவேறாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததே.

ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக 2, 3 முறை நடத்துவதாக உத்தரவாதம் அளித்தது. பின்னர் அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியது. இதேபோன்று உச்ச நீதிமன்றத்திலும் மே மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதாகத் தெரிவித்து நடத்தவில்லை.

இது உள்நோக்கத்துடன் நடக்கிறது. ஆகவே உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும், அலட்சியமாக நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பஞ்சாயத்துராஜ் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலைப் பெற இயலவில்லை என்கிற காரணத்தைக் காட்டி தமிழக தேர்தல் ஆணையம் நடத்த இயலாது என கூறியுள்ளது. மக்களவைத் தேர்தல் நடப்பதால் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி சரிபார்க்க நாளாகும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரை நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். எனவே உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த வழக்கறிஞர் ஜெய்சுகின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அனைத்து நலத்திட்டங்களும் முடங்கியுள்ளன என மனுதாரர் கூறுவது உண்மைக்கு மாறானது. ஏனென்றால் தூய்மைக் காவலர் திட்டத்தின்கீழ் அனைத்துப் பணிகளும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் நடந்து வருகின்றது.

மனுதாரர் யூகத்தின் அடிப்படையில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறுகிறார். பொதுமக்கள் அவதிப்படுவதாக உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கிறார். அதை நிராகரிக்க வேண்டும்.

எனவே, மனுதாரர் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும். ஏற்கெனவே திமுக தொடர்ந்த வழக்கில் மக்கள் தொகை அடிப்படையில் வார்டு வரையறை, பழங்குடியினர், பெண்கள் வார்டு இட ஒதுக்கீடு, புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு அதற்கான அரசாணைக் குறிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர் பட்டியல் தயாரித்து அதை தேர்தல் ஆணையம் சரிபார்த்து தரவேண்டி உள்ளதால் உடனடியாக உள்ளாட்சித்தேர்தலை நடத்த இயலாது.  ஏற்கெனவே மாநிலத் தேர்தல் ஆணையம் 3 மாத அவகாசம் கேட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் இந்த பிரமாணப் பத்திரத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்.

மனுதாரர் குற்றச்சாட்டை நிராகரிப்பது எங்கள் கடமை என்பதால் அதற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்து இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளோம்''.

இவ்வாறு ஹன்ஸ்ராஜ் வர்மா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close