மீன் ஆராய்ச்சி மூலம் ரூ.43 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்


சென்னை: மீன் ஆராய்ச்சி மூலம் ரூ.43 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை முட்டுக்காட்டில் உள்ள மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIBA) அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அப்போது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடி, மீன் வளர்ப்பு முறைகள் மற்றும் மீன் வளர்ப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ஏழைகளின் நலனே எங்கள் முதல் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சாமானியர்களுக்கான வேலைகள், வேலை வாய்ப்புகள், போதிய உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்தையும் வழங்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது முக்கியம். மீன் ஆராய்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

உற்பத்தியை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், கடல்வாழ் உயிரினங்களில் நோய்களைத் தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மீன் ஆராய்ச்சி மூலம் கடந்த காலங்களில் ரூ.43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், நமது ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்ட வேண்டும். இதற்கு ஆராய்ச்சியாளர்களின் பங்கு முக்கியம்” என தெரிவித்தார். முன்னதாக மீன் உணவு தயாரிக்கும் இடம், நண்டு வளர்ப்பு, இறால் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பகங்கள், ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.