[X] Close

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 07:18 am
  • அ+ அ-

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்று போற்றப்படுவது பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதியுலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள், அதிகாலை 4.30 மணி அளவில் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு சித்திரைத் தேர் மண்டபத்தை அடைந்தார். அங்கிருந்து அதிகாலை 5.15 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ‘கோவிந்தா, ரங்கா’ என பக்திப் பெருக்குடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தின்போது ஏராளமான குழந்தைகள், பெண்கள் கோலாட்டம் ஆடி, அரங்கனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியபடி வந்தனர். தேர் கீழச் சித்திரை வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு, மேற்கு, வடக்குச் சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.45 மணிக்கு நிலையை அடைந்தது.

சித்திரைத் திருவிழாவின் நிறைவாக, இன்று (மே 4) சப்தாவர்ணம், நாளை (மே 5) ஆளும் பல்லக்கு உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் பொன். ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close