[X] Close

புதுக்கோட்டையில் மாயமான வங்கி ஊழியர் சடலமாக மீட்பு: கொலை செய்து கடலில் வீசப்பட்டாரா? போலீஸார் விசாரணை 


  • kamadenu
  • Posted: 03 May, 2019 17:43 pm
  • அ+ அ-

-கே. சுரேஷ்

புதுக்கோட்டையில் மாயமான வங்கி ஊழியர் மணமேல்குடி அருகே கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த சில தினங்களாக வங்கிக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் திருவரங்குளம் அருகே வல்லநாடு எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இவரது கார் அண்மையில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்தக் காருக்குள் நகைகள், கணினியில் பயன்படுத்தக்கூடிய ஹார்ட்டிஸ்க் போன்ற பொருட்கள் எரிந்த நிலையில் கிடந்தன.  

இதனிடையே தனது கணவர் மாரிமுத்துவைக் காணவில்லை என அவரது மனைவி ராணி, கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் வங்கியில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை வங்கி அலுவலர்கள் இரவு, பகலாக போலீஸார் பாதுகாப்புடன் சரிபார்த்தனர். 

எனினும், வங்கியில் நகைகள் மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. ஆனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகள் மாயமாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.    

மாரிமுத்து மாயமான சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் மணமேல்குடி அருகே கோடியக்காடு எனும் பகுதியில் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியது. சந்தேகத்தின் பேரில் மாரிமுத்து மனைவி ராணியை போலீஸார் அழைத்துச் சென்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அவரும் இறந்தது மாரிமுத்துதான் என்பதை உறுதி செய்தார். 

IMG-20190503-WA0008.jpg 

இதையடுத்து அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் காரை எரித்ததோடு, யாரேனும் அவரைக் கொலை செய்து கடலில் போட்டுச் சென்றுள்ளனரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

மேலும், இவரது சந்தேக மரணத்துக்குக் காரணம் வங்கிப் பிரச்சினையா? அல்லது கூடா நட்பா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close