[X] Close

நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி: நெல்லையிலிருந்து 600 பேர் மதுரை தேர்வு மையத்துக்கு மாற்றம் 


600

  • kamadenu
  • Posted: 03 May, 2019 17:40 pm
  • அ+ அ-

கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்வுத்துறை அலட்சியம் காரணமாக அண்டை மாநிலங்களில் தேர்வு எழுதும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். கடும் எதிர்ப்பை அடுத்து இந்த ஆண்டு அப்படி இருக்காது என தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டும் குளறுபடி நடந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் நீட் நுழைவுத் தேர்வை எழுதினர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப இங்கு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தமிழகத்தைச் சேர்ந்த 5,700 மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தரப்படவில்லை என்பதும் கடைசி நேர அலைச்சல் கடுமையான மன உளைச்சல், பணச் செலவை உண்டாக்கியது.  தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் இது உருவாக்கியது.

மொழிப் பிரச்சினையாலும் மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளானார்கள். தேர்வுகளை மன அமைதியுடன் எழுதும் வாய்ப்பை இது சீர்குலைத்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இதற்கு முக்கியமான காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவர்கள் தேர்வு மையம் செல்ல பேருந்து, ரயில் போன்றவற்றில் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவம் , பல் மருத்துவம் உள்ளிட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு இந்த ஆண்டு மே 5-ம் தேதி  மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில்  நடைபெற உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மையத்தில் இருந்து 600 மாணவர்கள் மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றி தேசிய சோதனை தேர்வு முகமை அறிவித்துள்ளதால் மாணவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்வினை எழுதுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே தேர்வு மையங்களை ஒதுக்குவதில் எந்தவிதமான சிரமமும் ஏற்படக்கூடாது எனக் கருதி தனித்தனியாக தேர்வு மையங்களுக்கு எண்ணை தேசிய சோதனை தேர்வு முகமை ஒதுக்கியது.

அதிலும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்)  அளித்தபோது பல்வேறு குளறுபடிகள் இருந்தன. நீட் நுழைவுத் தேர்வினை  தமிழகத்தில்  இருந்து சுமார் 1 லட்சத்து 40 மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களில் 19,680 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் ஆவர்.

இந்நிலையில் தேசிய சோதனை தேர்வு முகமை நேற்று திடீரென தமிழகத்தில் மதுரை நகரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்த 5 மையங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்து ஒரு மையத்தினையும் மாற்றி அமைத்துள்ளது.

திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்துதேர்வு மையத்தினை மதுரை அழகர்கோவிலில் உள்ள பன்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா  வித்யாலாயா பள்ளிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மையத்தில் மாணவர்களின் பதிவு எண் 410608041 முதல் 410608640 வரை 600 மாணவர்கள் மதுரை மையத்திற்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் சென்று தேர்வினை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதுடன், உடலளவிலும் பாதிக்கும் நிலை ஏற்படும். 2 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு மதியம் 12 மணிக்கு வர வேண்டிய நிலை உள்ளதால் கடும் வெயிலில் 2 மணி நேர சோதனைக்கு நிற்கும் நிலையால் சோர்வடையக்கூடும்.

கடந்த ஆண்டு சிபிஎஸ்இ அமைப்பு தேர்வை நடத்தியது. இந்த ஆண்டு தேசிய சோதனை தேர்வு முகமை (national testing agency) என்கிற அமைப்பு மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அமைப்பை தொடர்புகொள்ள மாணவர்களால் முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

தொலைபேசி , இமெயில் தொடர்புகொண்டு சந்தேகம் கேட்க வழி இல்லாத நிலையில் திடீர் மாற்றம் குறித்த எஸ்.எம்.எஸ் மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close