[X] Close

எங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரூ. 13 கோடியை கைப்பற்றியதாக முதல்வர் பழனிசாமியால் நிரூபிக்க முடியுமா? - துரைமுருகன் சவால்


13

  • kamadenu
  • Posted: 03 May, 2019 13:24 pm
  • அ+ அ-

தங்களுக்கு சொந்தமான இடங்களில் 13  கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் நிரூபித்தால், தான் பதவியை ராஜினாமா செய்வதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்னைப் பற்றி பேசும்போது, ஆத்திரத்தில் பொய் மூட்டைகளை என் மீது கொட்டியதை, நேற்று நாளிதழ் ஒன்றில் பார்த்தபோது பழனிசாமியைப் பார்த்து, பரிதாபப்படுவதா?  சிரிப்பதா? அல்லது ஆத்திரப்படுவதா? என்றே தெரியவில்லை.

"இவருக்கு (அதாவது எனக்கு) சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர்  சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ    தங்கம், ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் அவர்களுக்கு எந்த வகையில் வந்தது என்பதை  மக்கள் எண்ணிப்  பார்க்க வேண்டும்”

இதுதான் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி கண்டுபிடித்து கூறிய அரிய, பெரிய கருத்து. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு விவரம் அற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது அத்தனையும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

1. எங்களுடைய வீடு - கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட போது,  அவர்கள்  எடுத்துச்  சென்றது  10  லட்சம்  ரூபாய் மட்டுமே.  அவர் கூற்றுப்படி, 13 கோடி ரூபாய் அல்ல.   ரூ.13 கோடி எடுத்த இடமும் எங்களுக்கு உரியது அல்ல.

2. 12  கிலோ  தங்கம்  கைப்பற்றப்பட்டதாகவும்  எடப்பாடி  கூறுகிறார். இந்த சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை.

இதுதான் உண்மை. வருமான வரித்துறையினர் கொடுத்துள்ள பஞ்சன் நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.

எல்லாவற்றையும் அறிந்து கொள்ளக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கின்ற முதல்வர் பழனிசாமி, ஏதும் தெரியாத சராசரி மனிதனைப் போல் பேசியிருப்பது கேலிக்குரியதாகும்.

கடைசியாக ஒரு சவால்!

முதல்வர் கூற்றுப்படி "எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கத்தையும் 13  கோடி ரூபாயையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் நிரூபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால், முதல்வர்  பழனிசாமி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?"

பாவம்! அவரென்ன ராஜினாமா செய்வது! மக்கள்தான் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்களே?" என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close