“தேர்தலின் போக்கைக் கண்டு இஸ்லாமியர்களிடம் பிரதமர் மோடி சரணடைந்துள்ளார்” - செல்வப்பெருந்தகை


தருமபுரியில் நடந்த மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசினார்.

தருமபுரி: தேர்தலின் போக்கைக் கண்டு பிரதமர் மோடி இஸ்லாமியர்களிடம் சரணடைந்துள்ளார் என தருமபுரியில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தருமபுரி பேருந்து நிலையம் அருகில் தனியார் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: 300-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் பாஜக 100 தொகுதிகளைக் கூட வெல்லாது என தெரிந்து கொண்டதால், மோடி தற்போது இஸ்லாமியர்களை புகழத் தொடங்கியுள்ளார். அதாவது மோடி சரணடைந்திருக்கிறார். இதைத் தான் ராகுல்காந்தி வெறுப்பு அரசியல் என்று கூறுகிறார். ஆர்எஸ்எஸ் மனித நேயத்துக்கு எதிரானது என்றும் அது அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.

ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஒவ்வொரு வித அரசியல் பேசிய பிரதமர் மோடி தற்போது, ‘இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை’ என்று கூறுகிறார். மோடி மற்றும் பாஜக-வின் உண்மை முகம் தற்போது தெரியவந்துள்ளது. வாக்குகளுக்காக அவர் குட்டிக்கரணம் அடிக்கிறார். தேசத்துக்கான தேர்தலாக அல்லாமல் மதத்துக்கான தேர்தலாக அவர்கள் இந்த தேர்தலை பார்த்தார்கள். நிலைமையை தெரிந்து கொண்டு 4-ம் கட்ட தேர்தலின் போது மன்னிப்பு கேட்கும் விதமாக பேசி வருகின்றனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு என அதிமுக-வினர் வன்னியர் சமூக்கத்தை ஏமாற்றினர். பாமக தூக்கிப் பிடிக்க வேண்டிய இயக்கம் காங்கிரஸ், தூக்கிப் பிடிக்க வேண்டிய தலைவர் ராகுல் காந்தி. சாதிவாரி கணக்கெடுப்பை புறம்தள்ளிய கட்சியான பாஜக-வுடன் கைகோர்த்திருப்பது நியாயமா? இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் சேது ராமன், மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநில அமைப்பு பொறுப்பாளர் ராம் மோகன், மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.