வரத்து அதிகரிப்பு... குறைய தொடங்கியது தக்காளி விலை! 


தக்காளி

கோயம்பேடு சந்தையில் கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்திருந்த தக்காளி விலை, இன்று வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.46 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தந்து. இதே போன்று அவரைக்காய் கடந்த வாரம் ரூ.70க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.90ஆக உயர்ந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.50, பாகற்காய் ரூ.40, கத்தரிக்காய், சாம்பார் வெங்காயம், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, நூக்கல் தலா ரூ.30, பீட்ரூட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.18, புடலங்காய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.

முருங்கைக்காய், அவரைக்காய் விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "கோயம்பேடு சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வருகிறது. தற்போது வரத்து குறைந்திருப்பதால், அதன் விலை உயர்ந்துள்ளது. இதே போன்று அவரைக்காய் வரத்து குறைந்திருப்பதால், அதன் விலையும் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு உயர்ந்தே இருக்க வாய்ப்புள்ளது" என்றனர்.