[X] Close

தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கும் மத்திய, மாநில அரசுகள்: மே தின பேரணியில் ஸ்டாலின் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:06 am
  • அ+ அ-

தொழிலாளர்களின் உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் நசுக்குவதாக தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணியின்போது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியில் திமுகவின் தொமுச சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பில் தொடங்கிய பேரணி, சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுச் சின்னத்துக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது: சென்னை நேப்பியர் பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்தை உருவாக்கியவர் கருணாநிதி. அதுபோல, நேப்பியர் பூங்காவை, மே தின பூங்கா என பெயர் மாற்றி உத்தரவிட்டவரும் கருணாநிதிதான். அண்ணா முதல்வராக இருந்த திமுக ஆட்சியில்தான் மே 1-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இந்நாளை ஊதியத்துடன் விடுமுறை நாளாக அறிவித்தவர் கருணாநிதி. மே தினத்துக்கு நாடு முழுவதும் ஊதியத்துடன் விடுமுறை என வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அறிவிக்கச் செய்தவரும் கருணாநிதிதான்.

தானே இந்த நாட்டின் காவலாளி என மோடி கூறுகிறார். ஆனால், திமுகதான் இந்த நாட்டின் காவலாளியாக, தொழிலாளர்களின் காவலாளியாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றன.

நாட்டில் உள்ள 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகளை மோடி அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடகு வைத்துவிட்டது. இதற்கெல்லாம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரும் 23-ம் தேதி தீர்வு கிடைக்கும். விடிவு காலம் பிறக்கும் என்றார்.

பேரணியில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், செயலாளர் இளங்கோ, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன், பூங்கோதை, சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close