[X] Close

குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக அல்ல: சூலூர் தொகுதி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:04 am
  • அ+ அ-

குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக அல்ல, சாதாரண ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து நேற்று ஜல்லிப்பட்டியில் அவர் பேசியதாவது:

சாதாரண ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. இது திமுகவை போல் குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. விவசாயம், நெசவாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு. கைத்தறி, விசைத்தறிக்கும் விலையில்லாமல் மின்சாரத்தை வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை தொடர்ந்து, ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். இதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்போம். விவசாயிகளின் நீர்த்தேவைகளை கணக்கில்கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டங்களால்தான் கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அனைத்து இல்லங்களுக்கும் தமிழர் பண்டிகைக்கு ரூ.1000 கொடுத்தோம். உடனே திமுகவினர் நீதிமன்றத்துக்கு சென்றனர். ஸ்டாலின் தூண்டுதல் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ரூ.2000 கொடுக்க நினைத்தோம். அதையும் ஸ்டாலின் தடுத்தார். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். ஏழைகளுக்கு கொடுப்பதை நிறுத்தும் கட்சி திமுக. ஸ்டாலின் பதவியில் இருந்த போது எதுவும் செய்யவில்லை. 2 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை தூண்டிவிட்டவர் ஸ்டாலின். 25 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார் துரைமுருகன். இவர் மகன் போட்டியிடும் தொகுதியில் தேர்தல்நடத்த முடியவில்லை. அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வீட்டில் பணம், நகை கைப்பற்றப்பட்டது. ஆனால் ஸ்டாலின் சொல்கிறார் நம்மை பார்த்து கலெக்‌ஷன், கரெப்ஷன், கமிஷன் என்று. இப்போது இது அவர்களுக்குத்தான் பொருந்தும். திமுக, மக்கள் விரோதக் கட்சி.

நீரா பானம், கொப்பரை தேங்காய் விலை உயர்வு, ஜல்லிப்பட்டியில் ரூ.4.23 கோடியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்காக பாடுபடும் அரசு அதிமுக. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றார்.

இதனைத் தொடர்ந்து செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டிபிரிவு, பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் முதல்வர் ஈடுபட்டார்.

ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்?

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக எம்எல்ஏக்கள் மீது புகார் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் என தெரியவில்லை. திமுகவுக்கும், அமமுகவுக்கும் நெருக்கம் உள்ளது அவர்களது பேச்சில் இருந்தே தெரிகிறது” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close